பிரதமரை அவமதித்த விவகாரத்தில் விரைந்து செயல்படும் அரசாங்கம் ஜம்ரி விநோத் விவகாரத்தில் சுணக்கம் காட்டுவது ஏன்? முன்னாள் சட்டத்துறை அமைச்சர் கேள்வி

கோலாலம்பூர், ஏப்ரல்.19-

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவமதிக்கப்பட்ட விவகாரத்தில் விரைந்து செயல்படும் அரசாங்கம், நூற்றுக்கணக்கான போலீஸ் புகார் செய்யப்பட்ட சர்ச்சைக்குரிய சமயப் போதகர் ஜம்ரி விநோத் காளிமுத்து விவகாரத்தில் சுணக்கம் காட்டுவது ஏன் என்று முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ஸையிட் இப்ராஹிம் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரதமரை ஒருவர் அவமதித்து விட்டார் என்ற குற்றச்சாட்டு வரும் போது நீதியை நிலைநாட்ட அமலாக்க நடவடிக்கைகள் படுவேகத்தில் செயல்படுகின்றன. ஆனால், இதே போன்று பிற அவமதிப்பு விவகாரங்களில் அரசாங்கம் தலையிடாமலும், சுணக்கம் காட்டுவது போலவும் தெரிகிறது என்று ஸையிட் இப்ராஹிம் குறிப்பிட்டார்.

இந்த இரு விவகாரங்களில் உள்ள இடைவெளி மற்றும் வேறுபாடுகளை முன்னாள் சட்டத்துறை அமைச்சர் என்ற முறையில் தம்மால் நேரடியாகக் காண முடிகிறது என்று ஸையிட் இப்ராஹிம் தெரிவித்தார்.

அரசாங்கம் எந்த அளவிற்கு மெத்தனமாகச் செயல்படுகிறது என்பதற்கு ஜம்ரி விநோத் விவகாரம் ஒரு நல்ல உதாரணமாகும் என்று முன்னாள் கோத்தா பாரு நாடாளுமன்ற உறுப்பினரான ஸையிட் இப்ராஹிம் குறிப்பிட்டார்.

இந்துக்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடும் தைப்பூச விழாவில் காவடிகளை ஏந்திய நிலையில் தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தும் பக்தர்களை, பேய் பிடித்தவர்களைப் போல ஆடுகிறார்கள், குடி போதையில் தள்ளாடுகிறார்கள் என்று கடந்த மார்ச் மாதம் மிகக் கடுமையாக விமர்சனம் செய்த ஜம்ரி விநோத்திற்கு எதிராக 894 போலீஸ் புகார்கள் செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் துறை அறிவித்திருந்தது.

இனம், சமயம் மற்றும் அரண்மனை சம்பந்தப்பட்ட விவகாரங்களில் நிந்தனைத் தன்மையில் கருத்து பதிவிட்டால் 3R சட்டம் பாயும் என்று அராசங்கம் கூறுகிறது. ஆனால், ஜம்ரி விநோத் விவகாரத்தில் 3R சட்டம் இன்னும் பாயாமல் இருப்பது ஏன்?

ஜம்ரி விநோத்திற்கு எதிராகச் செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான போலீஸ் புகார்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் விசாரணை அறிக்கை, சட்டத்துறை தலைவர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டு விட்டதாக போலீஸ் துறை கூறுகிறது.

அப்படியென்றால் அந்த விசாரணை அறிக்கை இன்னமும் சட்டத்துறை அலுவலகத்தில் தூசி படிந்த நிலையில் கிடக்கிறதா? என்று முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ஸையிட் இப்ராஹிம் கேள்வி எழுப்பினார்.

பிரதமர் அன்வாரை இப்ராஹிமை அவமதிக்கும் தன்மையில் காணொளியைப் பதிவேற்றம் செய்ததற்காக கிளந்தானில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையப் பணியாளருக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த வேகத்தை ஜம்ரி விநோத் விவகாரத்தில் ஏன் காட்ட முடியவில்லை என்பதே தமது கேள்வியாகும் என்று ஸையிட் இப்ராஹிம் குறிப்பிட்டார்.

அரசியல் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடிய வழக்குகளில் அரசாங்கம், கண்மூடித்தனமாகக் காது கேளாதவரைப் போல இரு காதுகளையும் பொத்திக் கொண்டும், வாயை மூடிக் கொண்டும் இருக்கிறது என்பதற்கு ஜம்ரி விநோத் வழக்கு ஒரு எடுத்துக்காட்டு என்பதை அப்பட்டமாகப் படம் பிடித்து காட்டுகிறது என்று ஸையிட் இப்ராஹிம் குறிப்பிட்டார்.

அப்படியென்றால், அன்வார் தலைமையிலான அரசாங்கத்திற்கும், இதற்கு முன்பு இருந்த அரசாங்கத்திற்கும் என்ன வித்தியாசம் என்று ஸையிட் இப்ராஹிம் கேள்வி எழுப்பினார்.

WATCH OUR LATEST NEWS