பிறை தோட்ட ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயத் திருப்பணி அடுத்த மாதம் முடிவுறும்

பிறை, ஏப்ரல்.19-

பினாங்கு, பிறையில், பிறை தோட்ட ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயத்தில் தற்போது நடைபெற்று வரும் சீரமைப்பு மற்றும் திருப்பணிகள் இன்னும் ஒரு மாதத்தில் பூர்த்தியாகும் என்று எதிர்பார்க்கப்படுவதாக பினாங்கு ஆட்சிக்குழு உறுப்பினரும், பிறை சட்டமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ சுந்தராஜு சோமு தெரிவித்தார்.

ஆலயத்தின் சீரமைப்புப் பணிகளுக்கு 15 லட்சம் ரிங்கிட் செலவாகும் என்று தொடக்கத்தில் மதிப்பீடு செய்யப்பட்டாலும், இதுவரையில் 16 லட்சம் ரிங்கிட் செலவிடப்பட்டு விட்டது. அது முழுமையாகப் பூர்த்தி செய்யப்படுவதற்கு 17 லட்சம் ரிங்கிட் செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுவதாக டத்தோஸ்ரீ சுந்தராஜு குறிப்பிட்டார்.

கடந்த தேர்தலில் போது, அந்த ஆலயத்திற்கு முதல் முறையாக வருகைப் புரிந்த தாம், ஆலயப் பொறுப்பாளர் வீரையா கேட்டுக் கொண்டதற்கு இணங்க, பிறை தொகுதியில் வெற்றிப் பெற்றால் ஆலயத்தில் அரைகுறையாக கட்டப்பட்டுள்ள மண்டபத்தை 3,4, ( மூன்று, நான்கு ) லட்சம் ரிங்கிட் செலவில் கட்டித் தருவதாகத் தாம் உறுதி கூறியிருந்ததாக டத்தோஸ்ரீ சுந்தராஜூ குறிப்பிட்டார்.

எனினும் இந்த ஆலயம் மிகவும் பழைமையாகி விட்டது. அதனை முழுமையாகக் கட்டிக் கொள்ளலாம் என்று தமது நண்பரும் தொழில் அதிபருமான டான்ஸ்ரீ ரமேஷ் ஆலோசனை கூறியதாக டத்தோஸ்ரீ சுந்தராஜு தெரிவித்தார்.

இதன் தொடர்பில் ஆலய நிர்வாகத்துடன் கலந்தாலோசித்தப் பிறகு ஆலயத்தை முழுமையாக கட்டிகொடுக்கும் முயற்சியை தாம் முன்னெடுத்ததாக ஆலய சீரமைப்புப் பணியை நேரடியாகப் பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் டத்தோஸ்ரீ சுந்தராஜு இதனை குறிப்பிட்டார்.

ஆலயம் முழுமையாக கட்டி முடிக்கப்படுமானால், பிறை வட்டாரத்தில் ஸ்ரீ முனீஸ்வரர் ஐயா ஆலயத்திற்கு அடுத்து ஓர் அழகான பெரிய ஆலயமாக இது விளங்கும். வரும் ஜுன் மாதம் இதன் கும்பாபிஷேகத்தைச் சிறப்பாக நடத்தி முடித்து விடலாம் என்று டத்தோஸ்ரீ சுந்தராஜு நம்பிக்கைத் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS