ஈப்போ, ஏப்ரல்.19-
அதிக எடையிலான சரக்குகளை ஏற்றிச் செல்லும் லோரிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க அந்த கனரக வாகனங்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் தொன்தோ எனப்படும் சாலை குண்டர்களுக்கு எதிராகச் சாலைப் போக்குவரத்து இலாகாவான ஜேபிஜே அஞ்சாது என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் இன்று திட்டவட்டமாக அறிவித்தார்.
ஜேபிஜே அமலாக்க அதிகாரிகள், கடமையைச் செய்யவிடாமல் இடையூறு விளைவிக்கும் இந்த சாலை குண்டர்களால் அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதை அமைச்சர் அந்தோணி லோக் ஒப்புக் கொண்டார்.
எனினும் கனரக வாகனங்கள் விதிமுறைகளை அனுசரித்துச் செல்வதை உறுதி செய்வதற்குக் கடமையாற்றி வரும் ஜேபிஜே அமலாக்க அதிகாரிகளுக்கு இத்தகைய இடையுறுகள் ஒரு போதும் விளைவிக்கக்கூடாது என்று அந்தோணி லோக் வலியுறுத்தினார்.
இன்று ஈப்போ, இந்திரா மூலியா அரங்கில் ஜேபிஜேவின் 79 ஆம் ஆண்டு நிறைவு விழாக் கொண்டாட்டத்தை நிறைவு செய்து வைத்து உரையாற்றுகையில் அந்தோணி லோக் இதனைத் தெரிவித்தார்.