பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல். 19-
மலேசிய தேசியக் கொடியான ஜாலோர் கெமிலாங்கின் வரைப்படத்தில் பிறை சின்னமின்றி, முழுமையற்ற நிலையில் பிரசுரித்து இருக்கும் சீன முன்னணிப் பத்திரிகையான சின் சியூ டெய்லிக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட போலீசாரின் புலன் விசாரணை அறிக்கை, மேல் நடவடிக்கைக்காக சட்டத்துறை அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதனைப் போலீஸ் படைத் தலைவர் டான் ஶ்ரீ ரஸாருடின் ஹுசேன் இன்று தெரிவித்துள்ளார்.
விசாரணை அறிக்கையின் உள்ளடக்கத்தை ஆராயவும், அடுத்தக் கட்ட உத்தரவைப் பிறப்பிக்கவும் ஏதுவாக சட்டத்துறை அலுவலகத்தில் நேற்று அந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதாக ஐஜிபி குறிப்பிட்டார்.
பிறையின்றி ஜாலோர் கெமிலாங் கொடியின் வரைப்படம் பிரசுரிக்கப்பட்டது தொடர்பில் சின் சியூ டெய்லி பத்திரிக்கையின் தலைமை ஆசிரியர் உட்பட இதுவரையில் 54 தனிநபர்களின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக டான் ஶ்ரீ ரஸாருடின் தெரிவித்தார்.