கோலாலம்பூர், ஏப்ரல்.19-
சர்ச்சைக்குரிய நிலத்தில் வீற்றிருக்கும் வழிபாட்டுத் தலங்கள்களை “சட்டவிரோத” அல்லது “ஹராம்” என்ற வார்த்தைகள் பயன்படுத்தப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று Lawyers for Liberty அமைப்பு, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமைக் கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த பிரச்சினையை அரசாங்கம் கையாளும் முறை, சகிப்புத்தன்மையற்ற சூழலை உருவாக்கி வருகிறது. குறிப்பாக, சமூக ஊடகங்களில், இந்து கோயில்களை இலக்காக கொண்டு, குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன என்று Lawyers for Liberty- அமைப்பின் இயக்குநர் ஸையிட் மாலேக் தெரிவித்துள்ளார்.
கோலாலம்பூர், ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவில் வீற்றிருக்கும் கோயில் இடமாற்ற விவகாரம் அரசியலாக்கப்பட்டு வருவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
குறிப்பாக, மலாய்க்கார முஸ்லிம்களின் ஆதரவைப் பெறுவதற்காக கோவிலை ஒரு கருவியாகப் பயன்படுத்தி, அதனை மத வெற்றியாக வடிவமைக்கப்பட்டு சித்தரிக்கப்பட்டு வருவதாக ஸையிட் மாலேக் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் விளக்கினார்.
இத்தகையச் செயல்கள், நாட்டில் உள்ள சிறுப்பான்மையினரை மேலும் அந்நியப்படுத்தி விடும் என்று அவர் நினைவுறுத்தினார்.
இந்நிலையில் கோவிலை இலக்காகக் கொண்டு ஓன்லைன் மூலம் நடத்தப்படும் தாக்குதல்களை பிரதமர் உடனடியாகத் தலையிட்டு தணிக்க வேண்டும் என்று ஸையிட் மாலேக் கேட்டுக் கொண்டார்.