தாமான் ஶ்ரீ மூடா வெள்ளப் பிரச்சனை – ஆயர் கூனிங் தேர்தல் பரப்புரையில் தீவிரமாக இருக்கும் சிலாங்கூர் முதல்வரைச் சந்திக்க பாதிக்கப்பட்ட மக்கள் முடிவு – கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினரை நிராகரித்தனர்

ஷா ஆலாம், ஏப்ரல்.20-

சிலாங்கூர் மாநிலத்தின் தாமான் ஶ்ரீ மூடா, புக்கிட் கெமுனிங், பத்து லாபான் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மக்கள் இன்று தங்கள் பகுதியில் தொடரும் வெள்ளப் பிரச்சனைக்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டமாகக் கூடினர். இப்பகுதி மக்களின் நிகராளியான உமாகாந்தன் கிருஷ்ணன் கூறுகையில், வெள்ளப் பிரச்சனைக்கு உடனடி தீர்வு காணக் கோரி, ஆயர் கூனிங் சட்டமன்ற இடைத் தேர்தலில் பரப்புரை செய்து வரும் சிலாங்கூர் மாநில முதல்வர் அமிருடின் ஷாரிக்கு ஒரு கோரிக்கை மனுவை வழங்க அவர்கள் முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்தார்.

தற்காலிகத் தீர்வுகளை வழங்குவதற்கு பதிலாக, வெள்ளப் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வைக் காண அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். அரசாங்கம் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடாவிட்டால் அமைதியான முறையில் போராட்டம் நடத்தப்படும் என்று முன்னதாக அறிவித்திருந்தோம் என்றும் அவர் கூறினார். இதற்கிடையில், கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பிரகாஷ் அங்கு வந்து நிலைமையை விளக்க முயன்றபோது, மக்கள் அவரைப் பேச விடாமல் கூச்சலிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சுமார் 10 நிமிடங்களுக்குப் பிறகு எஸ்.பிரகாஷ் இடத்தை விட்டுச் சென்றார்.

WATCH OUR LATEST NEWS