கோலாலம்பூர், ஏப்ரல்.20-
எதிர்வரும் மே, அக்டோபர் மாதங்களில் நடைபெறவிருக்கும் ஆசியான் உச்சநிலை மாநாடுகளின்போது அரசு ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து பணிபுரியும் முறையையும், பள்ளி மாணவர்களுக்கு வீட்டிலிருந்து கற்றல் கற்பித்தல் முறையையும் அமல்படுத்தும் திட்டத்திற்கு கியூபெக்ஸ் முழு ஆதரவு தெரிவித்துள்ளது. போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில் வெளியுறவு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முகமட் ஹாசான் முன்வைத்த இந்த யோசனை ஒரு புத்திசாலித்தனமான , செயலூக்கமான நடவடிக்கை என்று கியூபெக்ஸின் தலைவர் டத்தோ டாக்டர் அட்னான் மாட் கூறியுள்ளார்.
சமீபத்தில் சீன அதிபர் ஸீ ஜின்பிங்கின் அதிகாரப்பூர்வ வருகையின்போது பல முக்கியச் சாலைகள் மூடப்பட்டதால் மக்கள் அன்றாட வாழ்வில் சிரமங்களைச் சந்தித்தனர். அதுபோன்ற இடையூறுகளைத் தவிர்க்க இந்த நடவடிக்கை முக்கியமானது. படிப்படியான வீட்டிலிருந்து பணிபுரியும் முறையும் கற்றல் கற்பித்தல் முறையும் அரசு சேவைகளையும் கல்வியின் செயல்பாட்டையும் பாதிக்காது என்று தாம் நம்புவதாக அவர் குறிப்பிட்டார். மாறாக, இது மக்களின் நலனைப் பாதுகாக்கும், அரசாங்கச் சேவைகளைச் சீராக வழங்குவதை உறுதிச் செய்யும். இந்த யோசனை அமைச்சரவையில் முழுமையாக விவாதிக்கப்பட வேண்டும் என்று கியூபெக்ஸ் பரிந்துரைத்துள்ளதாக அட்னான் மாட் கூறினார்.