பிள்ளைகளின் அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணிக்க வேண்டும்

லுண்டு, ஏப்ரல்.20-

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் இணையம், சமூக ஊடகங்கள் போன்றவற்றைப் பயன்படுத்துவது உட்பட அவர்களின் அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று மகளிர், குடும்பம், சமூகநல மேம்பாட்டு அமைச்சர் டத்தோ ஶ்ரீ நன்சி ஷுக்ரி வலியுறுத்தினார். சிறுவர்களும் இளைஞர்களும் ஆரோக்கியமற்றச் செயல்களிலோ அல்லது தகாத நடத்தைகளிலோ ஈடுபடுவதைத் தடுக்க இஃது அவசியம். தற்போதையச் சட்ட அமலாக்கம் இந்தப் பிரச்சனையைக் கட்டுப்படுத்தப் போதுமானதாக இல்லை என்பதால், குடும்ப அமைப்பிலிருந்தே இந்த விழிப்புணர்வு தொடங்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

வீட்டிலோ அல்லது வெளியிலோ குழந்தைகள் என்ன செய்கிறார்கள் என்பதை அறிந்து கொள்வது பெற்றோர்களுக்குக் கட்டாயமாகிவிட்டது. குழந்தைகள் எப்போதும் கைப்பேசியில் மூழ்கியிருந்தால், பெற்றோருக்கு இஃது ஒரு சவாலாக இருக்கும், மேலும் அவர்கள் தங்கள் குழந்தைகளிடம் கண்டிப்பான அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும். வீட்டில் இருந்து கிடைக்கும் நல்லொழுக்கப் போதனைகள் குழந்தைகளின் நடத்தையையும் சமூகத்துடனான அவர்களின் தொடர்பிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். சமூகத்திற்குப் புறம்பான செயல்களில் இளைஞர்கள் ஈடுபடுவதைத் தடுக்க பள்ளிகளில் பாலியல் கல்வி போன்ற சமூகக் கல்விக்கு புதிய அணுகுமுறைகள் தேவை என்றும் அவர் குறிப்பிட்டார். பாலியல் கல்வி இன்னும் நாட்டில் ஒரு “தடை”யாகக் கருதப்படுவதால், இது ஒரு முக்கியமான கல்வி மதிப்பாகக் கற்பிக்கப்பட வேண்டும், இதில் பெற்றோர்களும் பங்கேற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

WATCH OUR LATEST NEWS