30க்கும் மேற்பட்ட பன்றிப் பண்ணைகள் இல்லை

தாப்பா, ஏப்ரல்.20-

பேரா மாநிலத்தின் பத்தாங் பாடாங், மூவாலிம் ஆகிய மாவட்டங்களில் 30க்கும் மேற்பட்ட பன்றிப் பண்ணைகள் இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை அம்மாநில அரசு மறுத்துள்ளது. மாநில மனிதவள மேம்பாடு, சுகாதாரம், இந்திய சமூக விவகாரங்கள், தேசிய ஒருமைப்பாட்டு ஆட்சிக்குழு உறுப்பினர் அ. சிவநேசன் கூறுகையில், அந்த இரு மாவட்டங்களிலும் 21 பன்றிப் பண்ணைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றார்.

ஆயர் கூனிங் சட்டமன்றத் தொகுதியில் ஒன்பது பண்ணைகள் மட்டுமே உள்ளன. அவற்றில் மூன்று நவீன பன்றிப் பண்ணையாக மாற்றப்பட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ஆறு பண்ணைகள் ஊராட்சி மன்ற அதிகாரிகளின் ஒப்புதலுக்காக காத்திருக்கின்றன. பேரா மாநில அரசு பன்றிப் பண்ணைகளை நவீனமயமாக்குவது மறுசீரமைப்பின் ஒரு பகுதியாகும். மறுசீரமைப்பு நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யாத பன்றிப் பண்ணைகள் மூடப்பட்டு வருகின்றன. கடந்த 26 மாதங்களில் பேரா ஒற்றுமை அரசாங்கம் இதைத்தான் செய்து வருகிறது என்று சிவநேசன் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS