கோலாலம்பூர், ஏப்ரல்.20-
கோலாலம்பூரில் உள்ள வணிக வளாகத்தில் பிறைச் சின்னம் இல்லாத மலேசிய தேசியக் கொடி திரையிடப்பட்ட சம்பவம் தொடர்பாக ஐந்து காவல் துறை புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ பாஃமி பாஃசீல் தெரிவித்தார். லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர், இந்த புகார்கள் நேற்று இரவு செமாந்தான் காவல் நிலையத்தில் மக்கள் நீதிக் கட்சி நிகராளிகளாலும் லெம்பா பந்தாய் அம்னோ கட்சியின் நிகராளிகளாலும் தாக்கல் செய்யப்பட்டன என்றார்.
முத்திரை, கொடி, பெயர் சட்டத்தின் கீழ் இந்த சம்பவம் குறித்து காவல் துறை விசாரணை நடத்த வேண்டும் என்பதற்காக இந்தப் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில் சட்டமீறல் ஏதும் கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் கேட்டுக் கொண்டார். தேசியக் கொடியின் பயன்பாடும் நெறிமுறைகள் குறித்தும் அனைவரும் அறிந்திருக்க வேண்டும் என்றும், இஃது ஒரு சாதாரண தவறு என்று கூற முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையே, இந்த தவறுக்கு சிங்கப்பூரை மையமாக க் கொண்டு இயங்கி வரும் Singapore Lactation Bakes நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது. மிட் வேலி கண்காட்சி மையத்தில் நடைபெற்ற குழந்தை பொருட்கள் கண்காட்சியில் அவர்கள் இந்த காணொளியைத் திரையிட்டனர். தேசியக் கொடி மலேசியாவின் அடையாளம், ஒற்றுமையின் சின்னம் என்பதை அவர்கள் ஒப்புக் கொண்டதுடன், இந்த தவறு வேண்டுமென்று செய்யப்படவில்லை என்றும் வருத்தம் தெரிவித்தனர். கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் உடனடியாக அந்த அரங்கத்தை மூடிவிட்டு உள் விசாரணை நடத்தி வருகின்றனர்.