கோத்தா பாரு, ஏப்ரல்.20-
2026ஆம் ஆண்டு மலேசியாவுக்கு வருகை புரியும் ஆண்டு திட்டத்தை மேலும் தீவிரப்படுத்தும் நோக்கில், 45 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க மலேசிய சுற்றுலாத்துறை இலக்கு முடிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு மலேசியாவுக்கு 38 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்ததை அடிப்படையாகக் கொண்டு இந்த இலக்கு சாத்தியமாகும் என்று அதன் தலைமை இயக்குநர் மனோகரன் பெரியசாமி நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த ஆண்டு பிப்ரவரி வரை மலேசியாவுக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 31.3 விழுக்காடு அதிகரித்து 6.7 மில்லியனாக உயர்ந்துள்ளது. இதில் சிங்கப்பூர், சீனா, இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களே முக்கிய பங்களிப்பாளர்கள் ஆவர். இந்த சுற்றுலாப் பயணிகளின் வருகைப் போக்கைப் பார்க்கும்போது, 45 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் என்ற இலக்கை அடைய முடியும் என்று தமது தரப்பு மிகவும் நம்பிக்கை கொண்டுள்ளதாக மனோகரன் குறிப்பிட்டார்.
இந்த இலக்கை அடைய, சுற்றுலாப் பொருட்கள் உற்பத்தியாளர்கள், மாநில அரசு உட்பட அனைத்து தொழில்துறை பங்குதாரர்களின் ஒத்துழைப்பும் மிகவும் முக்கியமானது என்று அவர் தெரிவித்தார்.