சுங்கை பூலோ, ஏப்ரல்.20-
சிறு வணிகர்களும் தொழில் முனைவோர்களும் அரசாங்கம் வழங்கும் பல்வேறு நிதி உதவித் திட்டங்களை, குறிப்பாக அமானா இக்தியார் மலேசியா மூலம் வழங்கப்படும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தொழில் முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டு துணை அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். இராமணன் கூறுகையில், சிறு வணிகங்களை மேம்படுத்தவும் விரிவாக்கம் செய்யவும் அமானா இக்தியார் மலேசியா எப்போதும் வாய்ப்புகளை வழங்கி வருகிறது என்றார்.
இருப்பினும், வணிகர்கள் தாங்களாகவே முன்வந்து அமானா இக்தியார் மலேசியாவை அணுக வேண்டுமே தவிர, அவர்கள் கதவைத் தட்டும் வரை காத்திருக்கக் கூடாது. அமானா இக்தியார் மலேசியா மூலம் ஏராளமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள போதிலும், பலரும் அதைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பது வருத்தமளிக்கிறது என்றார் இரமணன். உதவி தேவைப்படும் பலர் முன்வந்தால், அமானா இக்தியார் மலேசியா அவர்களுக்கு உதவத் தயாராக உள்ளது என்று AIM ஏற்பாடு செய்திருந்த நோன்புப் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்ச்சியில் இரமணன் தெரிவித்தார். கடந்த ஆண்டு மட்டும் சிறு தொழில் முனைவோருக்கு 2.6 பில்லியன் ரிங்கிட் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளதாக AIM நிர்வாக இயக்குநர் டத்தோ முகமட் ஷாமீர் அப்துல் அஸிஸ் தெரிவித்தார்.