தாப்பா, ஏப்ரல்.20-
சிலாங்கூர் மாநில முதல்வர் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரிக்கு வெள்ளப் பிரச்சனை தொடர்பான கோரிக்கை மனுவை சமர்ப்பிக்க தாமான் ஶ்ரீ மூடா குடியிருப்பாளர்களின் முயற்சி தோல்வியடைந்தது. அந்த ஆவணம் அவரது அதிகாரியிடம் மட்டுமே ஒப்படைக்கப்பட்டது. அமிருடின் ஷாரியை நேரில் பார்க்க முடியவில்லை.
குடியிருப்பாளர்களின் நிகராளியான உமாகாந்தன் கிருஷ்ணன், அந்த கோரிக்கை மனுவை அமிருடின் ஷாரியின் அரசியல் செயலாளரின் சிறப்பு அதிகாரி முகமட் பிஃர்டாவுஸ் ஷீர் முகமட்டிடம் பிடோர், கம்போங் கோல்டுஸ்டிரிம் செல்லும் சாலையோரத்தில் ஒப்படைத்தார். ஷா ஆலமில் இருந்து பேருந்தில் வந்திருந்த சில குடியிருப்பாளர்களும் அப்போது உடனிருந்தனர்.
தங்கள் பகுதியில் நீடித்து வரும் வெள்ளப் பிரச்சனைக்கு உடனடி தீர்வு காணக் கோரியே அந்த மனு சமர்ப்பிக்கப்பட்டதாக உமாகாந்தன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். தாமான் ஶ்ரீ மூடா குடியிருப்பாளர்கள் அடிக்கடி வெள்ளத்தால் பாதிக்கப்படுவதாகவும், தீர்வுக்காகக் காத்திருக்க இனியும் அவர்களுக்கு நேரமோ தெம்போ இல்லை என்றும் அவர் கூறினார். தாமான் ஶ்ரீ மூடா, புக்கிட் கெமுனிங், பத்து லாப்பான் ஆகிய பகுதிகளில் வெள்ளப் பிரச்சனையை முடிவுக்குக் கொண்டுவர நிரந்தரத் தீர்வு வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.