கோலாலம்பூர், ஏப்ரல்.21-
போலீஸ் துறையின் அதிகாரத்திற்கு உட்பட்ட போக்குவரத்துக் குற்றங்களுக்கான சம்மன்களுக்கு கூடுதல் கட்டண கழிவு வழங்கப்படக்கூடிய சாத்தியம் இருப்பதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைபுஃடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.
மைடிஜிட்டல் ஐடி செயலியில் தங்களைப் பதிவு செய்து கொண்டவர்கள், அந்த சலுகையைப் பெறலாம் என்று அவர் குறிப்பிட்டார். ஓன்லைன் மூலம் சம்பந்தப்பட்டவர்களை அடையாளம் காண்பதற்கும், உறுதிப்படுத்துவதற்கும் இந்த செயலி அவசியமாகிறது. இதில் பதிவு செய்து கொண்டவர்கள் மட்டுமே எதிர்காலத்தில் இந்த அனுகூலத்தைப் பெறலாம் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
இதற்கு முன்பு போக்குவரத்துக் குற்றங்களுக்கான சம்மன்களுக்கு 50 விழுக்காடு வரை கட்டண கழிவு வழங்கப்பட்டுள்ளது. மைடிஜிட்டல் ஐடி செயலி வரவின் மூலம் கூடுதல் கட்டணக் கழிவு வழங்கப்படும் பட்சத்தில் நிலுவையில் உள்ள தங்களுக்கான சம்மன்களுக்குத் தீர்வு காண முனைபவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்று டத்தோ ஶ்ரீ சைப்ஃடின் குறிப்பிட்டார்.
மைடிஜிட்டல் ஐடி செயலியில் பதிவு செய்து கொள்வது மிக சுலபமாகும். கைப்பேசியின் வாயிலாகப் பதிவு செய்து கொள்ள முடியும் என்று போலீஸ் படையின் ஹரிராயா விருந்து உபசரிப்பில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.