அலோர் ஸ்டார், ஏப்ரல்.22-
மாணவிகளுக்குப் பாலியல் தொல்லைக் கொடுத்ததாகக் கூறப்படும் தனியார் இடைநிலைப் பள்ளி ஒன்றின் ஆசிரியருக்கு நான்கு நாள் தடுப்புக் காவல் பெறப்பட்டுள்ளது.
அலோர் ஸ்டார் மாவட்டத்தில் உள்ள ஒரு இடைநிலைப் பள்ளியில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் இச்சம்பவம் தொடர்பில் 15 வயது மாணவி மற்றும் 25 வயதுடைய முன்னாள் மாணவி ஆகியோர் அளித்த போலீஸ் புகாரைத் தொடர்ந்து 34 வயதுடைய அந்த ஆசிரியர் கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
விசாரணைக்கு ஏதுவாக அந்த ஆசிரியர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, தடுப்புக் காவல் அனுமதி பெறப்பட்டுள்ளதாக கோத்தா ஸ்டார் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி. சித்தி நோர் சாலாவாத்தி சாட் தெரிவித்துள்ளார்.
முதலாவது புகார், அந்தப் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவி அளித்துள்ளார். பாலியல் தொடர்புக்கு அழைக்கும் வகையில் அந்த ஆசிரியர் அருவருக்கத்தக்க ஆபாச வார்த்தையைப் பயன்படுத்தி, சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு குருந்தகவலை அனுப்பியுள்ளார்.
பள்ளியில் பயிலும் மற்றொரு மாணவிக்கும், இதேபோன்ற அழைப்பை அனுப்பி, ஆபாசத் தன்மையிலான வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளார் என்று 15 வயது மாணவி புகார் அளித்து இருப்பதாக சித்தி நோர் சாலாவாத்தி குறிப்பிட்டுள்ளார்.