கோவில்களை ஹாராம் என்று கூறுவதா? மஹிமா கண்டனம்

கோலாலம்பூர், ஏப்ரல்.22-

கோவில்களை, சட்டவிரோதக் கோவில் அல்லது ஹாராம் என்று கூறப்படுவதை மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து அமைப்புகளின் ஒருங்கிணைப்புப் பேரவையான மஹிமாவின் தலைவர் டத்தோ என். சிவகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அரசாங்க நிறுவனங்கள் மற்றும் இலாகாக்கள் அனைத்தும் இந்து வழிபாட்டுத் தலங்களைச் சட்ட ஆலயங்கள் அல்லது ஹாராம் என்று குறிப்பிடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று டத்தோ சிவகுமார் வலியுறுத்தினார்.

கோவில்களைச் சட்டவிரோத ஆலயங்கள் என்று முத்திரை குத்தப்படுவது இந்து வழிபாட்டுத் தலங்களின் புனிதத்தைக் கலங்கப்படுத்துவதுடன், இந்துக்களை புண்படுத்துவதாகும் என்று டத்தோ சிவகுமார் குறிப்பிட்டார்.

மலாய் அகராதிப்படி, ஹாராம் என்ற வார்த்தையின் பயன்பாடு என்பது சட்டத்தால் தடை செய்யப்பட்டது அல்லது சட்டவிரோதமானது என்று பொருள்படும். மேலும் கோவில்களை ஹாராம் என்ற சொல்லாடல் பயன்படுத்துவது, இந்து திருத்தலத்தின் கண்ணியத்தைக் குறைப்பது மட்டுமல்லாமல், கோவில்களுக்கு வருகின்ற பக்தர்களையும், சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுகின்றனர் என்பதைப் போல் தவறான தோற்றத்தை ஏற்படுத்துகிறது என்று டத்தோ சிவகுமார் குறிப்பிட்டார்.

அங்கீகாரமின்றி கோவில் கட்டப்பட்டதால் அது சட்டவிரோதமானது என்று கருதப்படுமா? என்பதே தம்முடைய முக்கிய கேள்வியாகும் என்று டத்தோ சிவகுமார் குறிப்பிட்டார்.

தைப்பிங் மருத்துவமனை வளாகத்தில் உள்ள பழமை வாய்ந்த ஒரு கோவிலை, சட்டவிரோத ஆலயம் என்று முத்திரை குத்தப்பட்டு, அண்மையில் கடிதம் ஒன்றை, அதன் துணை இயக்குநர் வெளியிட்டு இருப்பது கண்டித்தக்கது என்பதுடன் அவரின் செயல் இந்து மதத்தை அவமதிப்பதாகும் என்று டத்தோ சிவகுமார் குறிப்பிட்டார்.

அனுமதியின்றி கோயில் கட்டப்பட்டது என்பது உண்மையாக இருந்தால், மஹிமாவில் உள்ள நாங்கள் எந்த நடவடிக்கையையும் ஆட்சேபிக்கவில்லை. ஆனால் இதுபோன்ற அவமதிப்பான வார்த்தைகளைப் பயன்படுத்துவது அவசியம்தானா? என்பதே எங்களின் கேள்வியாகும் என்று டத்தோ சிவகுமார் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதமானது என்ற சொல்லைப் பயன்படுத்தாமல் கோவில் “பதிவு செய்யப்படவில்லை அல்லது அங்கீகரிக்கப்படவில்லை போன்ற சொற்களைப் பயன்படுத்துவது மிகவும் பொருத்தமானதாக இருக்கும். இவ்வார்த்தைகள் மிகவும் கண்ணியமானது மட்டுமின்றி இறைவன் மீது நம்பிக்கை வைத்தல் என்ற ருக்குன் நெகாராவின் முதல் கோட்பாட்டைப் பிரதிபலிக்கிறது என்று டத்தோ சிவகுமார் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS