சிரம்பான், ஏப்ரல்.22-
தனது தந்தைக்கு நோக்கமின்றி மரணம் விளைவித்த குற்றத்திற்காக ஓர் இந்திய இளைஞருக்கு சிரம்பான் உயர் நீதிமன்றம் இன்று 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.
28 வயதுடைய P. நிரூபன் என்ற அந்த இளைஞருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தூக்குத் தண்டனை அல்லது கூடிய பட்சம் 40 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் கொலைக் குற்றத்திற்கான குற்றவியல் சட்டம் 302 ஆவது பிரிவு நோக்கமில்லாக் கொலையாகக் குற்றவியல் சட்டம் 304 ஆவது பிரிவுக்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு இத்தண்டனை விதிக்கப்பட்டது.
குற்றச்சாட்டின் தன்மை மாற்றப்பட்டதை நிரூபன் ஆட்சேபிக்காததால் அவருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிப்பதாக உயர் நீதிமன்றி நீதிபதி ரோஹானி இஸ்மாயில் தனது தீர்ப்பில் தெரிவித்தார்.
கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி அதிகாலை 1.10 மணியளவில் போர்ட்டிக்சன், லுக்குட், தாமான் டிஅம்பாங்கில் உள்ள தனது வீட்டில் இக்குற்றத்தைப் புரிந்ததாக ஒரு லோரி ஓட்டநரான நிரூபன் குற்றஞ்சாட்டப்பட்டார்.