பாசீர் கூடாங், ஏப்ரல்.22-
ஜோகூர், பாசீர் கூடாங்கில் ஒரு வீட்டில் கும்பல் ஒன்று, இளைஞர் ஒருவரைக் கடுமையாகத் தாக்கிய நிலையில், அந்த இளைஞர் குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடக்கும் காட்சியைக் கொண்ட காணொளி ஒன்று வைரலாகியுள்ளது.
முகநூலில் வைரலாகி வரும் ஒரு காணொளியில், பாதிக்கப்பட்டவர் ஐந்து முதல் ஏழு ஆடவர்களால் ஈவு இரக்கமின்றி தொடர்ந்து கண்மூடித்தனமாகத் தாக்கப்படுவதைக் காட்டுகிறது.
ஒரு நிமிடம் 22 வினாடிகள் நீடிக்கும் இந்த வைரல் காணொளியில், பாதிக்கப்பட்ட இளைஞரை, பல நபர்கள் பிடித்துக் கொண்டு முகம், மார்பு மற்றும் உடலின் பிற பாகங்களில் குத்துவதையும், உதைப்பதையும் சித்தரிக்கிறது.
அந்த கும்பலில் ஒருவன், பாதிக்கப்பட்ட இளைஞரின் அந்தரங்க உறுப்பில் குத்துவதையும், உதைப்பதையும் காண முடிகிறது.
தாக்குதலுக்கு ஆளான இளைஞர், அந்த கும்பலை எதிர்த்துப் போராட முடியாமல் மிக பலவீனமாகவும், வலியாலும் துடிக்கிறார். மேலும் அவரது மூக்கில் இரத்தம் வருவதையும் காண முடிகிறது.
இந்த காணொளியைக் கண்ணுற்ற வலைவாசிகள், சம்பந்தப்பட்ட இளைஞருக்கு எதிராக தாக்குதலைத் தொடுக்கும் நபர்களின் செயலை வன்மையாகக் கண்டித்துள்ளனர்.
அரச மலேசிய போலீஸ் படை உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இதற்கிடையில், இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் துறை விரைவில் ஊடக அறிக்கையை வெளியிடும் என்று ஸ்ரீ ஆலம் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமட் சொஹாய்மி ஈசாக் தெரிவித்தார்.