பிறப்புப் பத்திர மோசடிக் கும்பல் – மேலும் இரு பெண்கள் கைது

ஷா ஆலாம், ஏப்ரல்.22-

காலதாமதப் பதிவு என்று கூறி, போலி ஆவணங்களைப் பயன்படுத்தி, குழந்தைகளுக்கு மலேசிய பிறப்புச் சான்றிதழைப் பெறும் மோசடிக் கும்பலின் சட்டவிரோதச் செயல் அம்பலமானதைத் தொடர்ந்து ஓப் பெர்த் கைது நடவடிக்கையில், பிடிபட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

ஆகக் கடைசியாக மேலும் இரு பெண்களை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் கைது செய்துள்ளது. ஓர் அரசு ஊழியரான கிளினிக் ஒன்றின் 43 வயதுடைய மருத்துவ பெண் உதவியாளரும், 49 வயதுடைய பெண் ஏஜெண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிலாங்கூர் மாநில எஸ்பிஆர்எம் அலுவலகத்தில் விசாரணைக்காக நேற்று அழைக்கப்பட்ட அவ்விருவரும் பின்னர் கைதாகினர். அந்த இருவரும் இன்று ஷா ஆலாம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, 5 நாள் தடுத்து வைப்பதற்கான அனுமதியை எஸ்பிஆர்எம் பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்ட பெண் ஏஜெண்டு, தன்னுடைய மோசடி வேலைகளுக்கு, சிலாங்கூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் குழந்தைப் பிறந்ததைப் போல போலி ஆவணத்தைப் பெற்றுள்ளார் என்றும் அதற்கு சம்பந்தப்பட்ட பெண் மருத்துவ உதவியாளர் உடந்தையாக இருந்துள்ளார் என்றும் நம்பப்படுகிறது.

இந்த மோசடி வேலைக்கு சம்பந்தப்பட்ட மருத்துவ உதவியாளருக்கு 10 ஆயிரம் ரிங்கிட் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.

எஸ்பிஆர்எம் தொடங்கியுள்ள ஓப் பெர்த் சோதனை நடவடிக்கையில் இதற்கு முன்பு 16 பேர் பிடிப்பட்டுள்ளதாக எஸ்பிஆர்எம் அறிவித்து இருந்தது.

WATCH OUR LATEST NEWS