இஸ்மாயில் சப்ரிக்கு எதிராக எஸ்பிஆர்எம்மின் இரண்டாம் கட்ட விசாரணை

புத்ராஜெயா, ஏப்ரல்.22-

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரிக்கு எதிராக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் மேற்கொண்டு வரும் விசாரணை, மீண்டும் தொடங்கவிருப்பதாக அந்த ஆணையத்தின் தலைமை ஆணையர் டான்ஶ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்துள்ளார்.

65 வயதான இஸ்மாயில் சப்ரியின் சொத்துகளை அறிவிக்கக் கோரி, இரண்டாம் கட்ட விசாரணை நடத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

வரும் வியாழக்கிழமை இந்த விசாரணை நடைபெறும். அப்போது அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படும் என்று அஸாம் பாக்கி தெரிவித்தார்.

இன்று கோலாலம்பூரில் சான்றளிக்கப்பட்ட அதிகாரிகளுக்கான பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

ஆகக் கடைசியாக இஸ்மாயில் சப்ரி, கடந்த மார்ச் 24 ஆம் தேதி எஸ்பிஆர்எம் தலைமையகத்தில் 5 மணி நேரம் விசாரணை செய்யப்பட்டார்.

இஸ்மாயில் சப்ரியின் நான்கு முக்கிய அதிகாரிகள் கைது செய்யப்பட்டது மூலம் பாதுகாப்பான இடம் என்று நம்பப்படும் ஒரு வீடு உட்பட மூன்று இடங்களில் எஸ்பிஆர்எம் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

இந்தச் சோதனையில் 17 கோடி ரிங்கிட் ரொக்கப் பணம் மற்றும் 70 லட்சம் ரிங்கிட் பெறுமானமுள்ள 16 கிலோ எடை கொண்ட தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. மிகப் பெரிய அளவில் ரொக்கப் பணம் மீட்கப்பட்டது மூலம் இஸ்மாயில் சப்ரி, ஒரு சந்தேக நபர் என்று எஸ்பிஆர்எம் வகைப்படுத்தியுள்ளது.

WATCH OUR LATEST NEWS