ஜெர்த்தே, ஏப்ரல்.22-
தனது கணவர் திட்டுவார் என்பதற்காகத் தனது நகைகளை இரண்டு ஆசாமிகள் கத்தி முனையில் மடக்கி பறித்துக் கொண்டுச் சென்று விட்டனர் என்று பொய்ப் புகார் அளித்த மாது ஒருவர் கடைசியில் பிடிபட்டுள்ளார்.
30 வயதுடைய அந்த மாது நேற்று பிற்பகல் 3.39 மணியளவில் செய்த போலீஸ் புகாரை அடிப்படையாகக் கொண்டு, விசாரணை நடத்தியதில் அந்த மாது நாடகமாடுகிறார் என்பது தெரியவந்துள்ளது என்று பெசுட் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிண்டெண்டன் அஸாமுடின் அஹ்மாட் தெரிவித்தார்.
கம்போங் ஹூத்தான் நங்கா, ஜெர்த்தே என்ற இடத்தில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் அந்த கொள்ளைச் சம்பவம் குறித்து விவரிக்கையில் அந்த மாது முன்னுக்கு பின் முரணானத் தகவலை வழங்கியதில் சந்தேகம் வலுத்ததாக அவர் குறிப்பிட்டார்.
அந்த மாது 7 ஆயிரம் ரிங்கிட் பெறுமானமுள்ள நகைகளைத் தனது தோழியிடம் இரவலாகத் தந்துள்ளார். அந்த நகைகள் திரும்ப கிடைக்காமல் போனதால், கணவருக்குப் பயந்து கொண்டு, நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதைப் போல போலீசில் பொய் புகார் அளித்துள்ளார் என்று அஸாமுடின் அஹ்மாட் விளக்கினார்.