ஜார்ஜ்டவுன், ஏப்ரல்.22-
பினாங்கு சுங்கை பாக்காப்பில் கடந்த பிப்ரவரி 18 ஆம் தேதி நிகழ்ந்த கோர சாலை விபத்தில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள இரு உடன் பிறப்புகளான 7 வயது மு. தர்ஷன் மற்றும் அவரின் 5 வயது தங்கை மு. கவர்ஜிதா ஆகியோருக்கு உதவும் வகையில் தொடங்கப்பட்ட நன்கொடைத் திட்டம் வரும் ஜுன் மாதம் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சுங்கை பாக்காப் தமிழ்ப் பள்ளிக்குச் செல்லும் வேளையில் நிகழ்ந்த இந்தச் சாலை விபத்தில் தர்ஷன் தனது இடது கையை இழந்த நிலையில் அவரின் தங்கை கவர்ஜிதா முட்டிக்குக் கீழே வலது காலை இழந்துள்ளார்.
இவ்விரு உடன்பிறப்புகளுக்கு ஒரு நீடித்த காலத்திற்கு உதவ வேண்டும் என்ற நோக்கில் தொடங்கப்பட்ட நிதி உதவித் திட்டத்தில் இதுவரையில் ஒரு லட்சத்து 7 ஆயிரம் ரிங்கிட் நன்கொடை மட்டுமே பெறப்பட்டுள்ளதாக பினாங்கு ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தராஜு சோமு தெரிவித்தார்.
கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த நிதித் திட்டம் வரும் மே 21 ஆம் தேதி முடிவடைகிறது.அந்த இரண்டு சிறார்களுக்கும் 18 வயது எட்டும் வரையில் அவர்களுக்கு மாதம் தோறும் 1,500 ரிங்கிட்டை வழங்கும் வகையில் சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கம் வங்கிக் கணக்கில் தொடங்கப்பட்ட நிதித் திட்டத்தில், குறைந்த பட்சம் 2 லட்சம் ரிங்கிட்டை திரட்ட வேண்டிய நிலை உள்ளது என்று டத்தோஸ்ரீ சுந்தராஜு விவரித்தார்.
கோர விபத்தினால் தங்கள் வாழ்க்கையைp புரட்டிப் போட்டு இருக்கும் அவ்விரு உடன்பிறப்புகளின் வாழ்க்கையில் ஒளியேற்றி வைக்க, பெருமனதுடன் அனைவரும் நன்கொடை வழங்கி, உதவிக்கரம் நீட்டும்படி டத்தோஸ்ரீ சுந்தராஜு கேட்டுக் கொண்டார்.