கோலாலம்பூர், ஏப்ரல்.22-
பொன்ஸி அல்லது எம்பிஐ முதலீட்டுத் திட்ட மோசடி தொடர்பில் புதியதாகப் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களில் 22 கோடியே 36 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள 363 ஹெக்டர் டுரியான் தோட்டங்களும் அடங்கும் என்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இந்த சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டது மூலம் டான்ஸ்ரீ மற்றும் டத்தோ அந்தஸ்தைக் கொண்ட இருவர் உட்பட மொத்தம் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று AMLA ( அம்லா ) எனப்படும் சட்டவிரோதப் பண மாற்றம் புலன் விசாரணைப் பிரிவின் போலீஸ் தலைவர் டத்தோ முகமட் ஹஸ்புல்லா அலி தெரிவித்துள்ளார்.
புலன் விசாரணைக்கு ஏதுவாக இந்த ஐவரையும் 6 நாட்களுக்குத் தடுத்து வைப்பதற்கான நீதிமன்ற ஆணையைப் போலீஸ்துறை பெற்றுள்ளதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் ஹஸ்புல்லா அலி இதனைக் குறிப்பிட்டார்.