புத்ராஜெயா, ஏப்ரல்.22-
மத்திய அரசாங்கம் வழங்க முன்வந்த நெல் வயல்கள் பராமரிப்புக்கான குறைந்த நிதி ஒதுக்கீட்டை கெடா மாநில அரசாங்கம் நிராகரித்து விட்டதைத் தொடர்ந்து அந்த தொகையைத் தற்போது 100 கோடி ரிங்கிட்டாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உயர்த்தியுள்ளார்.
தற்போது 100 கோடி ரிங்கிட்டை மத்திய அரசாங்கம் அங்கீகரித்துள்ளதாக பிரதமர் அறிவித்துள்ளார். கெடா மாநிலத்தின் நெற்களஞ்சியத்தைப் பாதுகாக்கவும், பராமரிக்கவும் இந்தச் சிறப்பு நிதி ஒதுக்கீடு வழங்கப்படுவதாக பிரதமர் குறிப்பிட்டார்.
நேற்று கெடா மாநில சட்டமன்றத்தில் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முகமட் சனூசி முகமட் நோர் அளித்துள்ள பதிலுக்கு எதிர்வினையாற்றுகையில் பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.
கெடா மாநிலத்தில் ஒரு லட்சத்து 13 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் நெல் வயல்கள் உள்ளன. நாட்டில் மொத்த அரிசி உற்பத்தியில் கெடா மாநிலம் 43 விழுக்காடு பங்களிப்பை வழங்கி வருகிறது.
மழை, வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்கள் காரணமாக நெல் வயல்கள் அதிகமாகப் பாதிக்கப்பட்டு விவசாயிகளும் வருமானத்தை இழந்து வருவதாக மந்திரி பெசார் முகமட் சனூசி விளக்கியிருந்தார்.