பாசீர் கூடாங், ஏப்ரல்.22-
ஜோகூர், பாசீர் கூடாங், பிளேந்தோங் பாருவில் உள்ள ஓர் அடுக்குமாடி வீட்டில் ஆடவர் ஒருவர், கும்பல் ஒன்றினால் கண்மூடித்தமாகத் தாக்கப்பட்டு குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடந்த சம்பவம் தொடர்பில் போலீசார் 7 ஆடவர்களையும், ஒரு பெண்ணையும் கைது செய்துள்ளனர்.
முகநூலில் வைரலான இந்தச் சம்பவம் தொடர்பான காணொளியை அடிப்படையாகக் கொண்டு சம்பந்தப்பட்ட நபர்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டதாக ஶ்ரீ ஆலாம் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமட் சொஹாய்மி இஷாக் தெரிவித்தார்.
முன்னதாக இச்சம்பவத்தில் கடுமையாகத் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் 21 வயது இளைஞரிடமிருந்து கடந்த சனிக்கிழமை போலீசார் புகார் ஒன்றைப் பெற்றதாக அவர் குறிப்பிட்டார்.
சமூக வலைத்தளத்தின் வாயிலாக தனக்கு அறிமுகமான பெண் ஒருவரின் அழைப்பை ஏற்று, அந்த இளைஞர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 9.30 மணியளவில் அந்த அடுக்குமாடி வீடமைப்புப் பகுதிக்குச் சென்றுள்ளதாக பூர்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளது என்று ஏசிபி முகமட் சொஹாய்மி தெரிவித்தார்.
அந்த இளைஞர் அங்குச் சென்றதும், அவரை மடக்கிய எட்டுப் பேர் கொண்ட கும்பல், அவரை வீட்டிற்குள் அடைத்து வைத்து கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளனர். இதனால் அவருக்கு உதடு, காது ஆகிய பகுதிகளில் கடும் காயங்கள் ஏற்பட்ட நிலையில் உடல் முழுவதும் வீக்கம் கண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அன்றிரவு அந்த இளைஞர் செய்து கொண்ட போலீஸ் புகாரைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் 19 க்கும் 26 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த எட்டு பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.