கோலாலம்பூர், ஏப்ரல்.22-
கடந்த சனிக்கிழமை ஒரு பல்பொருள் அங்காடியில் முட்டை மற்றும் மளிகைப் பொருட்களைத் திருடியதற்காக 6 மாதக் குழந்தையின் தாயாருக்கு கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று மூன்று மாதச் சிறைத் தண்டனை விதித்தது.
லினி அஹ்மாட் என்ற 38 வயதுடைய அந்த மாது மாஜிஸ்திரேட் அய்னா அஸாரா அரிபிஃன் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
அந்த மாது பிடிபட்ட தினமான ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் தண்டனை அமலுக்கு வருவதாக மாஜிஸ்திரேட் அய்னா அஸாரா உத்தரவிட்டார்.
கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி கோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியிலிருந்து 374 ரிங்கிட் 69 காசு மதிப்புள்ள தனிப்பட்ட பராமரிப்புப் பொருட்கள், ரொட்டி, முட்டை, பிஸ்கட், சோயா பால், டிஷ்யூக்கள் மற்றும் பற்பசை உள்ளிட்ட 30 வகையானப் பொருட்களைத் திருடியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
கூடுதல் பட்சம் 10 ஆண்டு சிறையும், அபராதமும் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் பிரிவு 380 இன் கீழ் அந்த மாது குற்றஞ்சாட்டப்பட்டார்.
குற்றம் சுமத்தப்பட்ட மாதுவுக்கு 6 மாதக் கைக்குழந்தை இருப்பதாகவும், நோய்வாய்ப்பட்ட அவரின் தாயாரையும் கவனிக்க வேண்டி இருப்பதாகவும், கடும் நிதி நெருக்கடியினால் அவர் இக்குற்றத்தை இழைத்து இருப்பதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.