சிங்கப்பூரில் பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது

சிங்கப்பூர், ஏப்ரல்.23-

சிங்கப்பூரின் 14 ஆவது பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று புதன்கிழமை காலையில் தொடங்கியது. சிங்கப்பூரின் பொதுத் தேர்தல் சூடு பிடிக்கத் தொடங்கிய நிலையில் 18 குழுத் தொகுதிகள், 15 தனித் தொகுதிகள் என்று மொத்தம் 33 தொகுதிகளில் போட்டி நிலவலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காலை 10 மணி முதல் 11 மணி வரை ஒரு மணி நேரத்திற்கு வேட்புமனுத் தாக்கல் நடைபெற்றது. ஜுரோங், பியோனியர் காலேஜ் முதலியவை வேட்புமனுத் தாக்கல் நடைபெற்ற இடங்களில் அடங்கும்.

பிரதமர் லாரன்ஸ் வோங் மற்றும் துணைப் பிரதமர் கான் கிம் யோங் ஆகியோர் தத்தம் குழுத் தொகுதியில் போட்டியிடுவதற்கு மேற்கண்ட மையங்களில் தங்கள் வேட்புமனுவைத் தாக்கல் செய்தனர்.

பிஏபி எனப்படும் மக்கள் செயல் கட்சியின் சார்பில் குழுத் தொகுதி அணியினருக்கு தலைமையேற்றுள்ள பிரதமர் லாரன்ஸ் வோங், தமது மார்சிலிங் தொகுதியைத் தற்காத்துக் கொள்ளப் போட்டியிடுகிறார்.

துணைப் பிரதமர் கான் கிம் யோங் தமது குழுவினருக்குத் தலைமையேற்று சுவா சூ காங் குழுத் தொகுதியில் போட்டியிடுகிறார்.

சிங்கப்பூரின் 14 ஆவது பொதுத் தேர்தல் வரும் மே 3 ஆம் தேதி நடைபெறுகிறது.

WATCH OUR LATEST NEWS