கோல மூடா, ஏப்ரல்.23-
கெடா மாநில குற்றப் புலனாய்வுத்துறை போலீசார் நடத்திய ஓப்ஸ் மேகா ஹாஸ் சோதனையில் பல்வேறு குற்றங்களுக்காக 117 ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இச்சோதனை கடந்த ஏப்ரல் 17 ஆம் தேதி தொடங்கி 21 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு சுங்கை பட்டாணி, கோலா மூடா மாவட்டத்தில் நடத்தப்பட்டது என்று கெடா மாநில குற்றப் புலனாய்வுத்துறை போலீஸ் தலைவர் முதிர் நிலை உதவி கமிஷனர் முகமட் யாஸிட் முகமட் யியூ தெரிவித்தார்.
கோலா மூடா மாவட்டத்தில் அதிக அளவில் குற்றச்செயல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சில குறிப்பிட்ட இடங்களில் சூதாட்டம், குண்டர் கும்பல், போதைப்பொருள் மற்றும் ஒழுக்கக்கேடான செயல்கள் அதிகளவில் பதிவாகியிருப்பதாக உதவி கமிஷனர் முகமட் யாஸிட் குறிப்பிட்டார்.
இந்த ஓப்ஸ் மேகா ஹாஸ் சோதனையில் அதிகாரிகள் உட்பட 163 போலீஸ்காரர்கள் ஈடுபட்டனர். பிடிபட்டவர்களில் 51 பேர், போதைப் பொருள் உட்கொண்டுள்ளனர் என்பது சிறுநீர் பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக அவர் விளக்கினார்.
இச்சோதனை வழி கோலா மூடா மாவட்டத்தில் நிகழ்ந்த கொள்ளைச் சம்பவங்களில் 66 சம்பவங்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் முகமட் யாஸிட் கூறினார்.