கோலாலம்பூர், ஏப்ரல்.23-
இந்தியா, காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலமான பஹால்கமில் நேற்று பிற்பகலில் சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து, பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதல் சம்பவத்தில் மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் அந்த முன்னணி சுற்றுலாத் தலத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான நிலவரங்கள் அணுக்கமாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாக மலேசிய வெளியுறவு அமைச்சான விஸ்மா புத்ரா தெரிவித்துள்ளது.
புதுடில்லியில் உள்ள மலேசியத் தூதரகத்தற்குக் கிடைத்த தகவலின்படி, மலேசியர்கள் பாதிக்கப்பட்டதாக எந்தவொரு புகாரும் அளிக்கப்படவில்லை என்று விஸ்மா புத்ரா குறிப்பிட்டுள்ளது.
காஷ்மீர், பஹால்கம் சுற்றுலாத் தலத்தில் நேற்று பிற்பகல் 3 மணியளவில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள், இயற்கை அழகை ரசித்துக் கொண்டு இருந்த போது துப்பாக்கிகளை ஏந்திய பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்.
சுற்றுப் பயணிகளை நோக்கி பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாகச் சுட்டதில் 40-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா வழிகாட்டிகளும், குதிரைகளைச் சவாரிக்குக் கொண்டு வந்த உள்ளூர்காரர்களும் அங்கிருந்து ஓட்டம் பிடித்த நிலையில் பயங்கரவாதிகளை ஒடுக்க உடனடியாக இராணுவம் களம் இறக்கப்பட்டுள்ளது.