தேசியக் கல்வி முறையில் தமிழையும், மண்டரின் மொழியையும் புகுத்துவீர்

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல்.23-

மலேசியக் கல்வி முறையில் ஆசியான் மொழிகளைப் புகுத்துவதைக் காட்டிலும் முதலில், தமிழ் மற்றும் மண்டரின் மொழிகளை மாணவர்களுக்கு போதிப்பதைக் கட்டாயமாக்குமாறு முன்னணி விரிவுரையாளர் ஒருவர் பரிந்துரை செய்துள்ளார்.

அந்நிய மொழிகளை மாணவர்கள் கற்பது, வரவேற்கத்தக்கது. ஆனால், அந்நியப்பட்டுள்ள அந்த ஆசியான் மொழிகளை வலுக்கட்டாயமாக மாணவர்களிடம் திணிக்க வேண்டாம்.

மாறாக, தேசிய கல்வி முறையில் இரண்டறக் கலந்துள்ள தமிழ் மற்றம் மண்டரின் மொழிகளை மாணவர்களின் தேர்வுப் பாடமாக கட்டாயப்படுத்தினால் நமது மாணவர்கள் சராசரி 3 மொழிகளுக்கு மேல் ஆளுமை கொள்ள வாய்ப்பு இருக்கிறது என்று யூஐஏஎம் எனப்படும் மலேசிய அனைத்துலக இஸ்லாமிய பல்லைக்கழகத்தின் கல்வியல் விரிவுரையாளர் ஆவ்னோல் மாட்ஸியா ஸுபைரி பரிந்துரை செய்துள்ளார்.

தேசியப் பள்ளிகளில் தமிழையும், மண்டரின் மொழியையும் போதிக்கும் உத்தேசப் பரிந்துரைத் திட்டம், நீண்ட காலமாகவே ஒத்தி வைக்கப்பட்டு வருவதையும் அந்த மூத்த விரிவுரையாளர் சுட்டிக் காட்டினார்.

தமிழ், மண்டரின் ஆகிய மொழிகளை மாணவர்கள் கூடுதல் மொழிகளாகக் கற்பது மூலம் அம்மொழிகள் சார்ந்த மக்களின் கலாச்சாரக் கூறுகளையும், அவர்களின் கீர்த்தி வாய்ந்த பன்முகத்தன்மைகளையும் மாணவர்கள் மேலும் ஆழமாக அறிவதற்கான வாய்ப்பும், சந்தர்ப்பமும் கிடைக்கும் என்று விரிவுரையாளர் ஆவ்னோல் மாட்ஸியா குறிப்பிட்டார்.

மாணவர்களிடையே பன்மொழி ஆற்றலை வளர்க்க ஆசியான் மொழிகளான தாய்லாந்து, வியட்நாம் மற்றும் கம்போடியாவின் கெமெர் ஆகிய மொழிகளுடன் தமிழ் மற்றும் மண்டரின் மொழிகள் போதிக்கப்படும் என்று கல்வி அமைச்சர் பாஃலீனா சீடேக் அறிவித்து இருப்பது தொடர்பில் எதிர்வினையாற்றுகையில் விரிவுரையாளர் ஆவ்னோல் மாட்ஸியா மேற்கண்ட பரிந்துரையை முன் வைத்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS