சுங்கை பூலோ, ஏப்ரல்.23-
சிலாங்கூர், சுங்கை பூலோ, தாமான் ஶ்ரீ ஆலாமில் நீர் சேமிப்புக் குளம் ஒன்றின் நீர் தடுப்புக் கட்டுமானத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் சுமார் 35 வீடுகளில் வெள்ளம் புகுந்தது.
இன்று அதிகாலையில் கொட்டித் தீர்த்த கனத்த மழையில் சம்பந்தப்பட்ட குளத்தில் நீரின் கொள்ளளவு நிரம்பியது. நீரின் கொள்ளளவு அதிகமானதைத் தொடர்ந்து குளத்தைச் சுற்றியுள்ள நீர் தடுப்பு கட்டுமானத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.
குளத்து நீர், கரைபுரண்டோடி அருகில் உள்ள வீடமைப்புப் பகுதிக்குள் நுழைந்து வெள்ளக் காடானது. இதில் 35 குடும்பங்கள் பாதிக்கப்பட்டதாக தீயணைப்பு, மீட்புப் படையின் சிலாங்கூர் மாநில இயக்குநர் வான் முகமட் வான் இஸ்மாயில் தெரிவித்தார்.
கனத்த மழை பெய்து கொண்டு இருந்த வேளையில் காலை 5.30 மணிக்கு இச்சம்பவம் நிகழ்ந்தது. அவசர அழைப்பைப் பெற்று சம்பவ இடத்திற்கு விரைந்த பெஸ்தாரி ஜெயா தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த வீரர்கள் அந்த குளத்தைச் சுற்றியுள்ள நீர் தடுப்புக் கட்டுமானம் 20 அடி நீளம் வரை உடைந்ததைக் கண்டனர்.
அத்துடன் பிரதான சாலைகளில் நீரின் மட்டம் முழுங்கால் வரை உயந்திருந்ததாக வான் முகமட் குறிப்பிட்டார். எனினும் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் நிவாரண மையங்களுக்கு இடம் மாற்றப்படவில்லை என்று அவர் விளக்கினார்.