பிளாஸ்டிக் வாளிகள், தண்ணீர் டப்பாக்கள் பரபரப்பாக விற்பனை

ஜார்ஜ்டவுன், ஏப்ரல்.23-

பினாங்கு மாநிலத்தில் வரும் வெள்ளிக்கிழமை முதல் மூன்று தினங்களுக்கு நீர் விநியோகத் தடை ஏற்படப் போகிறது.

24 மணி நேரம், 48 மணி நேரம் மற்றும் 60 மணி நேரம் என மூன்று கட்டங்களாக நீர் விநியோகத் தடை திட்டமிட்டப்படி நடைபெறவிருக்கிறது.

இந்த நீர்த் தடையினால் மக்கள் முன்கூட்டியே போதுமான நீரை சேமித்து வைத்துக் கொள்ளும்படி மாநில குடிநீர் விநியோக வாரியம் அறிவுறுத்தி வருகிறது.

தண்ணீரைச் சேமித்து வைக்க வேண்டிய அவசியம் கருதி மக்கள் பிளாஸ்டிக் வாளி, தோம்புகள், தண்ணீர் டப்பாக்கள் மற்றும் சிறு கொள்கலன்கள் முதலியவற்றை வாங்குவதில் தீவிரம் காட்டி வரும் வேளையில் அந்த தண்ணீர் கொள்ளளவு உபகரணங்கள் மாநிலத்தில் தற்போது பரபரப்பாக விற்பனையாகி வருகின்றன.

பினாங்கு மாநிலத்தில் பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்து வரும் 33 வயது ஜிசேல் கோ கூறுகையில் தண்ணீர் தோம்புகள் மற்றும் பிளாஸ்டிக் வாளிகள் 50 விழுக்காட்டுக்கும் அதிகமாக விற்பனையாகி வருவதாகக் கூறுகிறார்.

வழக்கமாக நாள் ஒன்றுக்கு 10 முதல் 15 தண்ணீர் தோம்புகள் விற்பனை செய்யப்படும். ஆனால், கடந்த சில தினங்களாக நாள் ஒன்றுக்கு சராசரி 50 க்கும் மேற்பட்ட தோம்புகள் விற்பனையாகி வருகின்றன. இதனால் அதிமான தோம்புகளை வாங்கி, குவிக்க வேண்டிய நிலையில் தாம் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

செபராங் பிறை உத்தாரா, செபராங் பிறை தெங்கா மற்றும் தீமோர் லாவுட் ஆகிய மூன்று மாவட்டங்களில் குடிநீர் விநியோகத் தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS