மாணவிகளை மானபங்கம் செய்ததாக ஆசிரியர் கைது

இஸ்கண்டார் புத்ரி, ஏப்ரல்.23-

ஜோகூர் பாரு, முத்தியாரா ரினியில் உள்ள ஒரு பள்ளியில் மூன்றாம் ஆண்டில் பயிலும் 3 மாணவிகளை மானபங்கம் செய்ததாகக் கூறப்படும் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணைக்கு ஏதுவாக 47 வயதுடைய அந்த ஆசிரியரை 5 நாட்களுக்கு தடுத்து வைப்பதற்கு போலீசார், நீதிமன்ற ஆணையைப் பெற்றுள்ளனர் என்று இஸ்கண்டார் புத்ரி மாவட்ட போலீஸ் தலைவர் எம். குமரேசன் தெரிவித்தார்.

ஒன்பது வயதுடைய அந்த மூன்று மாணவிகள் அளித்துள்ள வாக்குமூலத்தைத் தொடர்ந்து அந்த ஆசிரியர் இஸ்கண்டார் புத்ரியில் நேற்று கைது செய்யப்பட்டதாக குமரேசன் குறிப்பிட்டார்.

2017 ஆம் ஆண்டு சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றவியல் சட்டத்தின் கீழ் அந்த ஆசிரியர் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறார்.

இச்சம்பவம் தொடர்பில் புலன் விசாரணை நடைபெற்று வருவதால் இது குறித்து மேலும் கருத்துரைக்க இயலாது என்று குமரேசன் குறிப்பிட்டார்.

கணிதப் பாடம் போதிக்கும் அந்த ஆசிரியர் பள்ளி வளாகத்திற்குள் இக்குற்றத்தைப் புரிந்ததாகக் கூறப்படுகிறது.

WATCH OUR LATEST NEWS