சைபர் ஜெயா, ஏப்ரல்.23-
மலேசிய வருமான வரி வாரியமான ஹாசில், 2025 ஆம் ஆண்டுக்கான ஹரி ராயா பொது உபசரிப்பை, இன்று புதன்கிழமை சைபர் ஜெயாவில் மெனாரா ஹாசில் கட்டடத்தில் வெகு சிறப்பாக நடத்தியது.
ஒற்றுமை உணர்வுடன் ஷாவாலை வரவேற்கும் வகையில் ராயா காயா ஹாசில் என்ற கருப்பொருளில், ஓர் அர்த்தம் பொதித்த கொண்டாட்டமாக இது அமைந்தது.

வருமான வரி வாரியத்தில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் சமூகத்தின் மத்தியில் நன்றியுணர்வைத் தொடர்ந்து பேணுவதற்கும் ஒற்றுமையின் மதிப்பை இணக்க சூழலில் மேலோங்க செய்யவும் ஹாசில் எப்போதுமே உறுதிப்பாடு கொண்டுள்ளது.

வருமான வரி வாரியத்தின் மையக் கொள்கையான உன்னத மதிப்புகளுக்கு ஏற்ப இணக்கமான, நட்பு ரீதியான பணிச்சூழலை உருவாக்குவதற்கான ஹாசிலின் தொடர்ச்சியான முயற்சிகளை ஹரி ராயா கொண்டாட்ட கருப்பொருள் பிரதிபலிக்கிறது என்று புகழாரம் சூட்டப்பட்டது.

இந்த பொது உபசரிப்பிற்கு சிறப்பு சேர்க்கும் வகையில் துணை நிதி அமைச்சர் லிம் ஹுய் யிங், கருவூலத்தின் பொதுச் செயலாளரும், மலேசிய வருமான வரி வாரியத்தின் உறுப்பினர் வாரியத் தலைவருமான டத்தோ ஜோஹான் மாஹ்மூட் மெரிகான், வாரிய உறுப்பினர்கள், ஹாசில் பணியாளர்கள், அரசாங்க சார்பு நிறுவனங்களின் பொறுப்பாளர்கள், நலன் சார்ந்த தரப்பினர் மற்றும் ஊடகவியலாளர் என அதிகமானோர் கலந்து கொண்டனர்.

ஹரி ராயா கொண்டாட்டத்துடன் உதவித் தேவைப்படக்கூடிய ஆதரவற்றோர் இல்லங்களுக்கு ஹாசில் சார்பில் நிதி உதவியும் துணை நிதி அமைச்சர் லிம் ஹுய் யிங் மூலம் வழங்கப்பட்டது.
Pertubuhan Kebajikan Anak Yatim Dan Miskin, Pusat Jagaan Rumah Bakti Nur Ain, Bangi, Rumah Kasih Harmoni, Paya Jaras ஆகிய மூன்று ஆதரவற்றோர் இல்லங்களுக்கு நிதி உதவி வழங்குவதற்கு இந்த ஹரி ராயா கொண்டாட்டத்தை ஹாசில் நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டது.

வருமான வரி வாரியத்தின் தலைமை நிர்வாக செயல்முறை அதிகாரி டத்தோ அபு தாரிக் ஜமாலுடின் தமது உரையில் இந்த பொது உபசரிப்பு, , மலேசிய மக்களின் கலாச்சாரத்தில் சகோதரத்துவம் மற்றும் நட்பின் உணர்வு எவ்வாறு ஒரு பாரம்பரியமாகத் தொடர்கிறது என்பதை அடையாளப்படுத்துவதாக உள்ளது என்று வர்ணித்தார்.