ஜார்ஜ்டவுன், ஏப்ரல்.23-
உணவுப் பொட்டலத்தைக் கொடுக்க வந்த உணவு விநியோகிப்பாளர் ஒருவர், தாம், வந்தடைந்து விட்டதைக் குறிக்கும் வகையில் ஆபாசத் தன்மையில் குறுந்தகவலை அனுப்பியதற்காக அந்த நபருக்கு எதிராக ஆசிரியை ஒருவர் போலீசில் புகார் செய்துள்ளார்.
புக்கிட் மெர்தாஜம், மாச்சாங் பூபோக்கைச் சேர்ந்த 27 வயதுடைய எம். அமுதா என்ற அந்த ஆசிரியை, இந்து மதத்துடன் தொடர்புபடுத்தி, அந்த உணவு விநியோகிப்பாளர் இழிச்சொல்லை உள்ளடக்கிய அந்த வார்ததையைப் பயன்படுத்தியுள்ளார் என்று தனது போலீஸ் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 4.40 மணியளவில் தாம் முன்னுறுதி செய்த உணவை எடுத்துக் கொண்டு வருவதில் கால தாமதம் காட்டப்பட்டதைத் தொடர்ந்து, நினைவுறுத்தல் குறுந்தகவலை அனுப்பிய போது, சம்பந்தப்பட்ட உணவு விநியோகிப்பாளர் இத்தகைய வார்த்தையைப் பிரயோகித்துள்ளதாக அமுதா தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சம்பந்தப்பட்ட உணவு விநியோகிப்பு நிறுவனத்தில் புகார் தெரிவித்த போது, அந்த உணவு விநியோகிப்பாளர் மோசடிப் பேர்வழியாக இருக்கலாம் என்றும் தங்களின் உணவு விநியோகிப்பாளர் பட்டியலில் அந்த தனிநபரை அடையாளம் காண முடியவில்லை என்றும் கைவிரித்து விட்டதாக அமுதா குறிப்பிட்டுள்ளார்.