ஷா ஆலாம், ஏப்ரல்.23-
நாட்டில் நிலவி வரும் இஸ்லாம் அல்லாதவர்கள் சம்பந்தப்பட்ட வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அவர்களின் உணர்ச்சிகரமான விவகாரங்களைக் கையாளுவதற்கு இஸ்லாம் அல்லாதவர்களுக்கான சமய ஆலோசனை வாரியத்தை அரசாங்கம் அமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இஸ்லாம் அல்லாதவர்கள் சம்பந்தப்பட்ட வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அவர்கள் தொடர்புடைய மதம் சார்ந்த விவகாரங்கள் தலைதூக்கும் போது, அவற்றை நல்ல முறையில் தீர்ப்பதற்கும், முறையான நடவடிக்கை எடுப்பதற்கும், அவை குறித்து விவாதிப்பதற்கும் சிறந்த அணுகுமுறையாக இஸ்லாம் அல்லாதவர்களுக்கான சமய ஆலோசனை வாரியம் ஒரு தளமாக விளங்கிட முடியும் என்று செந்தேசா பிகேஆர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்ஜி குணராஜ் பரிந்துரை செய்துள்ளார்.
தற்போது லிமாஸ் எனப்படும் பெளத்த, கிறிஸ்துவ, இந்து, சீக்கிய மற்றும் Tao மதத்தினருக்கான சர்வ சமயம் மன்றம் இருந்த போதிலும் அரசாங்கத்தின் நேரடி கவனத்திற்குக் கொண்டுச் செல்லவும், முறையான வழிகள் வாயிலாக நடப்பு பிரச்னைக்குத் தீர்வு காணவும் இஸ்லாம் அல்லாதவர்களுக்கான சமய ஆலோசனை வாரியம் நிறுவப்படுவது அவசியமாகும் என்று குணராஜ் வலியுறுத்தினார்.
இஸ்லாம் அல்லாதவர்களின் வழிபாட்டுத் தலங்களின் பதிவுகளை ஒருங்கிணைக்கவும், வழிபாட்டுத் தலங்களின் நில பயன்பாட்டு சர்ச்சையைத் தீர்க்கவும் இந்த வாரியம் முக்கிய பங்காற்ற முடியும் என்று குணராஜ் நம்பிக்கை தெரிவித்தார்.