புத்ராஜெயா, ஏப்ரல்.24-
நம்பிக்கை மோசடி வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு, 7 ஆண்டு சிறை, 2 பிரம்படித் தண்டனை மற்றும் ஒரு கோடி ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்ட மூவார் எம்.பி. சையிட் சாடிக் சையிட் அப்துல் ரஹ்மான் செய்து கொண்ட மேல்முறையீட்டு வழக்கில் வரும் ஜுன் 25 ஆம் தேதி புத்ராஜெயா, அப்பீல் நீதிமன்றம் தீர்ப்பளிக்கவிருக்கிறது.
இவ்வழக்கு மீதான விசாரணை இன்று நடைபெற்ற போது, சையிட் சாடிக்கின் மேல்முறையீட்டில், மேற்கண்ட தேதியில் அப்பீல் நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கவிருப்பதாக துணை பப்ளிக் பிராசிகியூட்டர் வான் ஷாஹாருடின் வான் காடின் தெரிவித்தார்.
10 லட்சம் ரிங்கிட்டை நம்பிக்கை மோசடி செய்தது மற்றும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரிங்கிட் சட்டவிரோதப் பண மாற்றம் தொடர்பில் பெர்சத்து கட்சியின் முன்னாள் இளைஞர் பிரிவுத் தலைவரான சையிட் சாடிக் குற்றவாளியே என்று கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பர் 9 ஆம் தேதி கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்து இருந்தது.
இத்தீர்ப்பை எதிர்த்து முன்னாள் இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சரான 33 வயது சையிட் சாடிக், அப்பீல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.