ஆபாசத் தன்மையிலான வார்த்தை: விசாரணையைத் தொடங்கினர் போலீசார்

புக்கிட் மெர்தாஜாம், ஏப்ரல்.24-

உணவுப் பொட்டலத்தைக் கொடுக்க வந்த உணவு விநியோகிப்பாளர் ஒருவர், தாம், வந்தடைந்து விட்டதைக் குறிக்கும் வகையில் இனத் துவேசம் மற்றும் ஆபாசத் தன்மையில் குறுந்தகவலை அனுப்பியதாக ஆசிரியை ஒருவர் அளித்துள்ள புகார் குறித்து தற்போது விசாரணை செய்யப்பட்டு வருவதாக செபராங் பிறை தெங்கா மாவட்ட போலீஸ் தலைவர் ஹெல்மி அரிஸ் தெரிவித்தார்.

புக்கிட் மெர்தாஜாம், மாச்சாங் புபோக்கைச் சேர்ந்த 27 வயதுடைய எம். அமுதா என்ற அந்த ஆசிரியை கொடுத்துள்ள புகார் தொடர்பில் விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த விவகாரம் தற்போது குற்றவியல் சட்டம் 298 ஆவது பிரிவு மற்றும் 1998 ஆம் ஆண்டு தொடர்பு, பல்லூடகச் சட்டத்தின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக ஹெல்மி அரிஸ் தெரிவித்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 4.40 மணியளவில் தாம் முன்னுறுதி செய்த உணவை எடுத்துக்கொண்டு வருவதில் கால தாமதம் காட்டப்பட்டதைத் தொடர்ந்து, நினைவுறுத்தல் குறுந்தகவலை அனுப்பிய போது, சம்பந்தப்பட்ட உணவு விநியோகிப்பாளர் இத்தகைய தகாத வார்த்தையைப் பிரயோகித்துள்ளதாக ஆசிரியை அமுதா தனது போலீஸ் புகாரில் தெரிவித்து இருந்தார்.

இது குறித்து கருத்துரைத்த தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சர் டத்தோ ஆரோன் அகோ டகாங், சம்பந்தப்பட்ட உணவு விநியோகிப்பாளர் செயலை அறவே ஏற்றுக் கொள்ள முடியாது என்று குறிப்பிட்டு இருந்தார்.

அந்த உணவு விநியோகிப்பாளருக்கு எதிராகச் சட்டம் பாய வேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்தியிருந்தார்.

WATCH OUR LATEST NEWS