தாப்பா, ஏப்ரல்.24-
அரசாங்க இலாகாக்கள், ஏஜென்சிகள் அனைத்தும் இந்து வழிபாட்டுத் தலங்களை சட்டவிரோத ஆலயங்கள் என்று குறிப்பிடுவதைத் தடுத்து நிறுத்தும் உத்தரவு ஒன்றைப் பிறப்பிப்பதற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அமைச்சரவையின் அங்கீகாரத்தைப் பெற வேண்டும் என்பதற்கு அவசியமில்லை என்று மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் வலியுறுத்தியுள்ளார்.
இந்த விவகாரம் தொட்டு, நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் பேசப்படவில்லை என்பது ஒரு பெரிய பிரச்னை அல்ல. காரணம், இந்த விவகாரம், பிரதமர் என்ற முறையில் டத்தோஸ்ரீ அன்வாரிடமே நேரடியாக கொண்டு சேர்க்கப்பட்டு விட்டது என்று தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரான டத்தோஸ்ரீ சரவணன் குறிப்பிட்டார்.
சட்டவிரோதக் கோவில் என்ற வார்த்தையைப் பயன்படுத்தக்கூடாது என்பது குறித்து தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதியது உட்பட பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரிடம் கொண்டு சேர்க்கப்பட்டு விட்டது.
எனவே இந்த விவகாரத்தை அமைச்சரவையில் பேச வேண்டும், அதற்கான அங்கீகாரத்தைப் பெற வேண்டும் என்ற அவசியமில்லை. மாறாக, அரசாங்க இலாகாக்களுக்கும், ஏஜென்சிகளுக்கும் உத்தரவிடுமாறு அரசாங்க தலைமைச் செயலாளரை பிரதமர் நேரடியாகக் கேட்டுக் கொள்ள முடியும் என்று டத்தோஸ்ரீ சரவணன் விளக்கினார்.
தைப்பிங் மருத்துவமனை வளாகத்தில் உள்ள பழமை வாய்ந்த ஓர் ஆலயம், சட்டவிரோதக் கோவில் என்று அதன் துணை இயக்குநர், ஒரு கடிதத்தில் குறிப்பிட்டுள்ள விவகாரம், பெரும் சர்ச்சையானதைத் தொடர்ந்து, ஆலயம் தொடர்பான தெளிவுரை குறித்து, பிரதமருக்கு நேரடியாக ஒரு கடிதத்தை டத்தோஸ்ரீ சரவணன் அண்மையில் அனுப்பியிருந்தார்.