கோலாலம்பூர், ஏப்ரல்.24-
மிக பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட பிகேஆர் கட்சியின் தொகுதி அளவிலான தேர்தல் நிறைவு பெற்ற நிலையில் இனி உயர்மட்டத் தலைவர்கள் சம்பந்தப்பட்ட மத்தியச் செயற்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் முன்னெடுக்கப்படும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஃஸியா சால்லே அறிவித்துள்ளார்.
வரும் மே மாதம் 23 ஆம் தேதி தொடங்கி மூன்று தினங்களுக்கு ஜோகூரில் நடைபெறும் பிகேஆர் கட்சியின் தேசிய மாநாட்டில் மத்தியச் செயற்குழுத் தலைவர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடைபெறும் என்று புஃஸியா சால்லே குறிப்பிட்டார்.
நேற்று இரவு நடைபெற்ற பிகேஆர் கட்சியின் மத்தியச் செயற்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு டிசம்பர் 15 ஆம் தேதி நடைபெற்ற பிகேஆர் கட்சியின் சிறப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு ஏற்ப 2025 ஆம் ஆண்டுக்கான தேசிய மாநாட்டில் முதல் முறையாக பேராளர்களால், மத்தியச் செயற்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படவிருக்கின்றனர் என்று புஃஸியா சால்லே குறிப்பிட்டார்.
மாநாட்டிற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தற்போது சமூகமாக நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.