ஆயர் குரோ, ஏப்ரல்.24-
மலாக்கா, மாலிமில் உள்ள பேரங்காடி வளாகத்தில் மூதாட்டியின் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டுத் தப்பிச் சென்ற வழிபறி கொள்ளையன் ஒருவனை, உணவு விநியோகிப்பாளர்கள் வளைத்துப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
70 வயது மூதாட்டி, பேரங்காடியில் பொருட்களை வாங்கியப் பின்னர் தனது காரை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது அவரின் சங்கிலியைச் சம்பந்தப்பட்ட கொள்ளையன் பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிவிட்டதாக மலாக்கா மாநில போலீஸ் தலைவர் ஸுல்கைரி முக்தார் தெரிவித்தார்.
அந்த கொள்ளையனை அடையாளம் கண்ட உணவு விநியோகிப்பாளர்கள், அவனை வளைத்துப் பிடித்ததாக ஸுல்கைரி முக்தார் குறிப்பிட்டார்.
அந்த இளைஞனை உணவு விநியோகிப்பாளர்கள் வளைத்துப் பிடிக்கும் காட்சியைக் கொண்ட காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலானதையும் அவர் விளக்கினார்.
பிடிப்பட்ட இளைஞனைச் சோதனை செய்த போது இரண்டு கைப்பேசிகள், ஒரு மோட்டார் சைக்கிள், பல வகையான வங்கி கிரெடிட் கார்டுகள், அடையாள கார்டுகள், 107 ரிங்கிட் ரொக்கம் முதலியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அவனுக்கு ஏற்கனவே இரண்டு குற்றப்பதிவுகள் இருப்பதாக ஸுல்கைரி முக்தார் குறிப்பிட்டார்.