ஜார்ஜ்டவுன், ஏப்ரல்.24-
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஓர் அரசியல் சொற்பொழிவு நிகழ்ச்சியில் கூறப்பட்ட கருத்துக்கள் தொடர்பாக பினாங்கு மாநில பாஸ் தலைவர் பாஃவ்ஸி யூசோபிற்கு எதிராக தொடுக்கப்பட்ட அவதூறு வழக்கில் அந்த பாஸ் தலைவர், ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்எஸ்என் ராயரிடம் இன்று பகிரங்க மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.
கடந்த 2023 ஆம் ஆண்டு ஜுன் மாதம் பினாங்கு பாலிக் பூலாவில் பெரிகாதான் நேஷனல் சிறந்த கூட்டணி என்ற தலைப்பில் நடைபெற்ற ஒரு செராமாவில் டிஏபியைச் சேர்ந்த ஆர்எஸ்என் ராயர் ஓர் இனவெறியர், ஆணவமிக்கவர், பொறுப்பற்றவர் என்று பாஃவ்ஸி யூசோப் குற்றஞ்சாட்டியிருந்தார்.
அது மட்டுமின்றி பினாங்கு, ஜெலுத்தோங்கில் ஒரு தீ விபத்து சம்பவத்தின் போது, மலாய்க்காரர் மற்றும் இந்தியர்கள் வாக்குகள் இல்லாமல் தம்மால் வெற்றி பெற முடியும் என்றும், அவர்களின் வாக்குகளை இழப்பதைப் பற்றி தமக்கு கிஞ்சிற்றும் கவலையில்லை என்றும் மிக ஆணவத்துடன் ஆர்எஸ்என் ராயர் பேசியுள்ளார் என்றும் அந்த செராமாவில் பாஃவ்ஸி யூசோப் தெரிவித்தார்.
பாஃவ்ஸி யூசோப் தமக்கு எதிராகக் கூறியுள்ள குற்றச்சாட்டு அடிப்படையற்றது என்றும், தாம் அவ்வாறு கூறவில்லை என்றும் கூறி, அந்த பாஸ் தலைவருக்கு எதிராக ஆர்எஸ்என் ராயர் இந்த அவதூறு வழக்கைத் தொடுத்தார்.
இவ்வழக்கு விசாரணை இன்று பினாங்கு உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற போது, சிலர் தன்னிடம் கூறிய தகவலின், உண்மை நிலையை ஆராயாமல் அவசரப்பட்டு, ஆர்எஸ்என் ராயருக்கு எதிராக அவதூறு தன்மையிலான வார்த்தைகளை வெளியிட்டு விட்டதாகவும் அதற்காக அவரிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் பாஃவ்ஸி யூசோப் தெரிவித்தார்.
தன்னுடைய மன்னிப்பை பாஃவ்ஸி யூசோப், நீதிபதி ஹெல்மி கானி முன்னிலையில் வாசித்தார்.
உணர்ச்சிவசப்பட்ட நிலையில்” உள்ளவர்களிடமிருந்து இந்தத் தகவல் வந்தது என்பதால் தாமும் அவசரப்பட்டு, தவறான தகவலை வெளியிட்டு விட்டதாக பாஃவ்ஸி யூசோப் தனது மன்னிப்பில் கேட்டுக் கொண்டார்.
மேலும் தாம் கூறிய வார்த்தைகளை மீட்டுக் கொள்வதாகவும் பாஃவ்ஸி யூசோப் தெரிவித்தார்.
நீதிபதி ஹெல்மி கானி முன்னிலையில் ஓர் இணக்கத் தீர்ப்பின் அடிப்படையில் பாஃவ்ஸி யூசோப்பின் மன்னிப்பு பதிவு செய்யப்பட்டது.
இதன் தொடர்பில் ஆர்எஸ்என் ராயருக்கு வழக்கு செலவுத் தொகையாக பத்தாயிரம் ரிங்கிட்டை வரும் ஜுன் மாதம் 24 ஆம் தேதிக்குள் செலுத்துமாறு பாஃவ்ஸி யூசோப்பிற்கு நீதிபதி ஹெல்மி கானி உத்தரவிட்டார்.
ஆர்எஸ்என் ராயர் சார்பில் வழக்கறிஞர்கள் கே சைமன் முரளி மற்றும் கோக் யுவேன் லின் ஆகியோர் ஆஜராகினர்.