பூச்சோங், ஏப்ரல்.24-
ஐந்து நாட்கள் நடைபெற்ற மேம்பட்ட AI, 3D பிரிண்டிங் மற்றும் லேசர் வேலைப்பாடு திட்டத்தின் நிறைவு விழாவிற்கான நற்சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று சிறப்பாக நடைபெற்றது.
பூச்சோங், System & Skills Training Concept Sdn. Bhd. நிறுவனத்தில் நடைபெற்ற இந்த இந்த ஐந்து நாள் பட்டறையைக் கூச்சிங் நாடாளுமன்ற உறுப்பினரும், மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம்மின் அரசியல் செயலாளருமான டாக்டர் கேல்வின் யீ, அதிகாரப்பூர்வமாக நிறைவு செய்து வைத்து, பங்கேற்றவர்களுக்கு நற்சான்றிதழை வழங்கிச் சிறப்பு செய்தார்.
இந்த நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்திய ஏற்பாட்டாளர்கள், பயிற்றுனர்கள், மனித வள அமைச்சின் அதிகாரிகள் மற்றும் அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் டாக்டர் கேல்வின் தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
இந்த பயிற்சித் திட்டம், மலேசிய இந்தியர்கள் திறன் முன்னெடுப்புத் திட்டமான MISI –யின் ( மிஸி ) ஒரு பகுதியாகும். மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம்மின் தொலைநோக்குப் பார்வையில் விளைந்த ஆக்கப்பூர்வமானத் திட்டமாகும்.

இந்தத் திட்டம் இனம், மதம் அல்லது பின்னணியைப் பொருட்படுத்தாமல் மலேசியர்கள் – எதிர்காலச் சவால்களை எதிர்கொள்ள போதுமான திறன்களைக் கொண்டிருப்பதை உறுதி செய்கிறது என டாக்டர் கேல்வின் Kelvin தமது உரையில் தெரிவித்தார்.
திறன் பயிற்சி என்பது ஓர் அடிப்படைத் தேவையாகும். MISI மூலம், நாங்கள் உதவியை மட்டும் வழங்குவதில்லை. வாய்ப்புகளையும் உருவாக்கித் தருகிறோம்.
MISI-க்குப் பின்னால் உள்ள உத்வேகமும் அதுதான். நிலையான மற்றும் கண்ணியமான வாழ்க்கையைக் கட்டியெழுப்ப இளைஞர்களுக்குத் திறன்களை வழங்குவதாகும்.
குறிப்பாக பொருளாதார மற்றும் வேலைவாய்ப்பு சவால்களை எதிர்கொள்ளக்கூடிய இந்திய இளைஞர்கள் யாரும் பின்தங்கியிருக்கக்கூடாது என்பதை உறுதிச் செய்வதற்காக அரசாங்கத்தின் ஒரு உறுதியான நடவடிக்கையாக MISI விளங்குகிறது என்று டாக்டர் கேல்வின் யீ தமது உரையில் குறிப்பிட்டார்.
இதனிடைய இந்த ஐந்து நாள் பயிற்சி தங்களுக்கு ஆக்கப்பூர்வமான பலனை தந்துள்ளதாக இதில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.

இந்தியர்கள் இன்னும் முழுமையாக கால்பதிக்காதத் துறையாக இருக்கும் AI தொழில்நுட்பம் குறித்து அதிகளவில் தெரிந்துக் கொல்ளக்கூடிய வாய்ப்பைத் தமக்கு வழங்கியதாக பூச்சோங்கை சேர்ந்த சுபாஷினி குப்புசாமி தெரிவித்தார்.
இங்கு கற்றுக்கொண்ட விவரங்களை எவ்வாறு தனது வர்த்தகத்திற்குப் பயன்படுத்துவது என்பது குறித்து சிந்திக்க வைக்கும் பட்டறையாக இது அமைந்தது என்று கோலகுபுபாருவைச் சேர்ந்த சந்தோஷ்குமார் சத்திய சீலன் தெரிவித்தார்.
தாம் எதிர்பார்த்து வந்ததைவிட AI, 3D பிரிண்டிங் மற்றும் லேசர் வேலைப்பாடு குறித்து அதிகமாகத் தெரிந்துக் கொள்ளக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டதாக பூச்சோங்கைச் சேர்ந்த தினகரன் சுரேஷ் குறிப்பிட்டார்.
MISI 150 க்கும் மேற்பட்ட பயிற்சிகளை வழங்கியுள்ளது. நாடு முழுவதும், AI, விருந்தோம்பல், காட்சி எடிட்டிங் மற்றும் பிற துறைகள் உட்பட இன்றுவரை, MISI 1.0 வின் கீழ் 8,000 க்கும் மேற்பட்டவர்கள் இவற்றில் பங்கேற்று, பயன்பெற்றுள்ளதாக டாக்டர் கேல்வின் யீ குறிப்பிட்டார்.