ஷா ஆலாம், ஏப்ரல்.24-
பிச்சை எடுப்பதில் ஏற்பட்ட எல்லைத் தகராற்றில் ஆடவர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் இன்று வியாழக்கிமை மதியம் 12 மணியளவில் ஷா ஆலாம், செக்ஷன் 18 இல் ஒரு வங்கியின் முன் நிகழ்ந்தது.
இதில் 40 வயது மதிக்கத்தக்க நபர்,சம்பவ இடத்திலேயே குத்தி கொலை செய்யப்பட்டதாக ஷா ஆலாம் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி. முகமட் இக்பால் இப்ராஹிம் தெரிவித்தார். வங்கி வீற்றிருக்கும் பகுதியில் பிச்சை எடுத்து வந்த நபர், அப்பகுதிக்குப் புதியதாக வந்த மற்றொரு பிச்சைக்காரருடன் வாய்த் தகராற்றில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
அப்போது இருவருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டதில் வங்கிப் பகுதியில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த நபர், அப்பகுதிக்குப் புதியதாக வந்த நபரைக் கத்தியில் குத்திக் கொலை செய்துள்ளதாகப் பூர்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளது.
நெஞ்சுப் பகுதியிலேயே கத்தியால் பல முறை குத்தப்பட்டதால் அந்த நபர், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்ததாக ஏசிபி. முகமட் இக்பால் குறிப்பிட்டார். இச்சம்பவம் தொடர்பில் 28 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த நபருக்கு 9 குற்றப்பதிவுகள் இருப்பதாக அவர் தெரிவித்தார்.