கோலாலம்பூர், ஏப்ரல்.24-
ஜம்மு & காஷ்மீரில் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் சுற்றுப் பயணிகள் உட்பட அப்பாவி மக்கள் 28 பேர் கொல்லப்பட்ட துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மலேசிய இந்தியக் குரல் இயக்கத்தின் தலைவர் வீ. பாபாராய்டு தமது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டார்.
சுமார் 28 அப்பாவி தனிநபர்கள், கொடூரமாகக் கொல்லப்பட்டதும், பலர் காயமடைந்ததும் ஏற்றுக் கொள்ள முடியாத வன்முறைச் செயலாகும்.
இத்தகைய பயங்கரவாதமானது நேரடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் இழைக்கப்பட்ட அநீதி மட்டுமல்ல, நாம் கொண்டுள்ள மனிதநேயத்தின் அத்துமீறலாகும் என்று பாபாராய்டு குறிப்பிட்டுள்ளார்.
உலகளாவிய சமூகத்தின் ஒரு பகுதியாக, இது போன்ற செயல்களைக் கண்டிப்பதில் நாம் ஒன்றுபட்டு நிற்க வேண்டும். மேலும் ஒவ்வொரு மனித வாழ்க்கையின் அமைதி, நீதி மற்றும் கண்ணியத்தை நிலைநிறுத்தக் கூட்டாகப் பாடுபட வேண்டும்.
மேலும் இந்த பயங்கராதத் தாக்குதலுக்குப் பொறுப்பானவர்கள், நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று பாபாராய்டு இன்று வெளியிட்ட இரங்கல் செய்தியில் கேட்டுக் கொண்டுள்ளார்.