கோலாலம்பூர், ஏப்ரல்.
இன்று வெளியிடப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான எஸ்பிஎம் தேர்வு முடிவுகள் மீதான பகுப்பாய்வுக் கண்ணோட்டத்தில் மலேசிய தேசிய கொடியான ஜாலோர் கெமிலாங்கைத் தவறாகச் சித்தரித்து இருக்கும் கல்வி அமைச்சின் செயலினால் அந்த அமைச்சின் தலைவரைப் பணி இடை நீக்கம் செய்ய முடியுமா? என்று சிலாங்கூர் மாநில முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினர் தெங் சாங் கிம், அரசாங்கத்தை இன்று சீண்டிப் பார்த்துள்ளார்.
ஜாலோர் கெமிலாங் கொடியைத் தவறாகச் சித்தரித்ததற்காக கல்வி அமைச்சு இன்று பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளது.
தனது தவற்றைக் கல்வி அமைச்சு ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து அமைச்சின் தலைவரைப் பணியிடை நீக்கம் செய்ய முடியுமா? அவரைப் போலீசார் கைது செய்வார்களா? என்று தெங் சாங் கிம் கேள்வி எழுப்பினார்.
முன்னணி சீனப் பத்திரிக்கையான சின் சியூ டெய்லி, கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி தனது பத்திரிகையில் பிரசுரித்த ஜாலோர் கெமிலாங் கொடியில் பிறை சின்னமின்றிக் காணப்பட்ட தவற்றுக்காக அந்தப் பத்திரிகையின் தலைமையாசிரியர் மற்றும் செய்தி ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த இருவரையும் விசாரணை என்ற பெயரில் புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் கைது செய்தது. அந்த சீனப் பத்திரிக்கையின் அலுவலகத்தின் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஜாலோர் கெமிலாங் கொடியைக் காட்சிப்படுத்துவதில் தவறு நிகழ்வது அறவே ஏற்றக் கொள்ள முடியாது என்றும், அனுமதிக்க இயலாது என்றும் உரிய சட்ட நடவடிக்கைக்கு உட்பட்டாக வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதற்கு முன்பு திட்டவட்டமாகத் தெரிவித்து இருந்தார்.
அப்படியென்றால் கல்வி அமைச்சில் நடந்துள்ள தவற்றுக்காக அந்த அமைச்சை மூட முடியுமா? அதன் தலைவரைப் பணியிடை நீக்கம் செய்ய முடியுமா? அவரைப் போலீசார் கைது செய்யவார்களா? என்று தெங் சாங் கிம் வினவியுள்ளார்.
கல்வி அமைச்சு இன்று வெளியிட்ட படத்தில் ஜாலோர் கெமிலாங் கொடியில் இரண்டு நட்சத்திரங்கள் காணப்படுவது பெரும் சர்ச்சையாகியுள்ளது.