போப்பாண்டவர் இறுதிச் சடங்கில் இரு அமைச்சர்கள் பங்கேற்பு

கோலாலம்பூர், ஏப்ரல்.25-

கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவர் போப்பாண்டவர் பிரான்சிஸ் உடலுக்கு அஞ்சலி செலுத்தவும், இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளவும் உலகத் தலைவர்களும் லட்சக்கணக்கான மக்களும் வத்திகன் நகரில் குவிந்து வருகின்றனர்.

இந்நிலையில் போப்பாண்டவரின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு, மலேசியா சார்பாக அஞ்சலி செலுத்துவதற்கு பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அஸாலினா ஒத்மான் சையிட் மற்றும் தொழில் முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சர் டத்தோ ஏவோன் பெனடிக் ஆகிய இரு அமைச்சர்கள் வத்திகன் நகருக்குப் பயணமாகினர்.

கத்தோலிக்கத் திருச்சபையின் 266-வது போப்பாண்டவராகவும், வத்திகன் நகரத்தின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட போப்பாண்டவர் பிரான்சிஸ், உடல்நலக் குறைவால் கடந்த ஏப்ரல் 21-ம் தேதி தனது 88 ஆவது வயதில் மரணமடைந்தார்.

போப்பாண்டவரின் உடல் ரோம் நகரின் வத்திகனில் அமைந்துள்ள செயிண்ட் பீட்டர்’ஸ் பசிலிகா கத்தோலிக்க தேவாலயத்தின் முன் வைக்கப்பட்டிருக்கிறது.

இறுதிச் சடங்கு நாளை சனிக்கிழமை நடைபெறவிருக்கிறது. அவரது உடல் வத்திகனில் இருக்கும் அவரது காசா சந்தா மார்த்தா மாளிகையில் அடக்கம் செய்யப்படவிருக்கிறது.

செயிண்ட் பீட்டர்’ஸ் பசிலிகா கத்தோலிக்க தேவாலயத்தில், கடந்த புதன்கிழமையிலிருந்து சனிக்கிழமை வரை மூன்று நாட்கள் போப் பிரான்சிஸ் உடல் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.

இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக 25 லட்சம் பொதுமக்கள் வரை வத்திகன் நகரில் குவிய நேரிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறறது.

WATCH OUR LATEST NEWS