16 வயது பெண் கடத்தல் – கணவன் மனைவி உட்பட ஐவர் மீது குற்றச்சாட்டு

சிரம்பான், ஏப்ரல்.25-

20 லட்சம் ரிங்கிட் பிணைப் பணம் கோரி, 16 வயது இளம் பெண்ணைக் கடத்தியதாக கணவன், மனைவி உட்பட ஐவர், சிரம்பான், செஷன்ஸ் நீதிமன்றத்தில் நேற்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.

இந்தக் கடத்த்லில் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கூறப்படும் 21 வயது இந்திய இளைஞர் கிள்ளான், புக்கிட் திங்கியில் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட வேளையில் இந்தக் கடத்தலுக்குப் பின்னணியில் இருந்து செயல்பட்டவர்கள் என்று நம்பப்படும் ஐவர் நீதிபதி டத்தின் சுரிதா பூடின் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

ஒரு பெண் குமாஸ்தாவான 31 வயது D. சஷ்வீனா, அவரின் 32 வயது கணவர் T. போகராஜ், 21 வயது பி. கோஷன் குமார், 23 வயது பி. சிவீஷினா மற்றும் 23 வயது பாஃர்ஹின் முகமட் அரிபிஃன் ஆகியோரே குற்றஞ்சாட்டப்பட்ட நபர்கள் ஆவர்.

கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி மாலை 5.45 மணியளவில் சிரம்பான் 2, அப்டவுன் அவேநியூவில் ஒரு முடித்திருத்தும் நிலையத்திற்கு முன் அவர்கள், இந்த கடத்தல் குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால், கூடிய பட்சம் 40 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 34 ஆவது பிரிவின் கீழ் ஐவரும் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.

எனினும் இந்த ஐவரும் தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து விசாரணைக் கோரியுள்ளனர். முன்னதாக, இந்த ஐவரையும் ஜாமீனில் அனுமதிக்கக்கூடாது என்று பப்பளிக் பிராசிகியூட்டர் நோராஸிஹா அஸ்முனி நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டார்.

கடத்தப்பட்ட 16 வயது பெண்ணின் பாதுகாப்புக்கு இந்த ஐவரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியதால் அவர்களை விடுவிக்கக்கூடாது என்று அவர் வாதிட்டார்.

ஐவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தி. ஹர்பால் சிங், தமது வாதத்தில் ஜாமீன் அனுமதிப்பது குறித்து எழுத்துப்பூர்வமான வாதத்தை முன்வைக்கவிருப்பதால் இதற்குக் குறிப்பிட்ட கால அவகாசம் வழங்கும்படி நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டார்.

வழக்கறிஞர் ஹர்பால் சிங்கின் விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி டத்தின் சுரிதா பூடின், வழக்கு விசாரணையை வரும் மே 14 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

WATCH OUR LATEST NEWS