ஜோகூர் பாரு, ஏப்ரல்.25-
வரும் ஏப்ரல் 28 ஆம் தேதி திங்கட்கிழமை ஜோகூர் மாநிலத்திற்கு சிறப்பு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஜோகூர் மந்திரி டத்தோ ஓன் ஹாபிஃஸ் காஃஸி இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஜேடிடி எனப்படும் ஜோகூர் டாருல் தாக்ஸிம் கால்பந்து குழுவினர் வெளிப்படுத்தி வரும் சிறப்பான ஆட்டத்தின் அடைவு நிலைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஜோகூர் மாநில மக்களுக்கு இந்தச் சிறப்பு விடுமுறை அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக டத்தோ ஓன் ஹாபிஃஸ் குறிப்பிட்டார்.
2024 ஆம் ஆண்டு மலேசியக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியின் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றள்ள ஜேடிடி அணியினர், நாளை ஏப்ரல் 26 ஆம் தேதி சனிக்கிழமை ஸ்ரீ பகாங் அணியுடன் மோதுகின்றனர்.
இதனையொட்டி, ஜோகூர் மாநிலத்திற்கு வரும் திங்கட்கிழமை சிறப்பு விடுமுறையை வழங்குவதற்கு இடைக்கால ஜோகூர் சுல்தான், துங்கு மாஹ்கோத்தா இஸ்மாயில் முடிவு செய்துள்ளதாக டத்தோ ஓன் ஹாபிஃஸ் தெரிவித்தார்.