ஜார்ஜ்டவுன், ஏப்ரல்.25-
நான்கு வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் 17 வயது பள்ளி மாணவன் உயிரிழந்தார். இச்சம்பவம் நேற்று மாலை 5.55 மணியளவில் ஜார்ஜ்டவுன், ஜாலான் மஸ்ஜிட் நெகிரி சாலையில் நிகழ்ந்தது.
மோட்டார் சைக்கிளில் பத்து லஞ்சாங்கில் இருந்து குளுகோரை நோக்கி அந்த மாணவன் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்ததாக திமோர் லாவுட் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அப்துல் ரஸாக் முகமட் தெரிவித்தார்.
அந்த மாணவனின் மோட்டார் சைக்கிளை, பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. நிலைத் தடுமாறி அந்த மாணவன், கார் ஒன்றுடன் உரசி, கீழே விழுந்ததில் அவ்வழியே வந்த லோரியில் மோதி பலத்த காயங்களுக்கு ஆளானான்.
அந்த மாணவன் பினாங்கு மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்ட போது, உயிரிழந்து விட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. மாணவனை மோட்டார் சைக்கிளில் மோதிய நபரை போலீசார் அடையாளம் கண்டுள்ளதாக ஏசிபி அப்துல் ரஸாக் தெரிவித்தார்.